மியன்மார் நிலச்சரிவில் சிக்கி 48 பேர் பலி: 100 பேர் மாயம்

கனமழை காரணமாக மியன்மாரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இதுவரை 48 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டுள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கிய இன்னும் பலரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இன்னும் 100 பேரைக் காணவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நிலச்சரிவில் சிக்கி 47 பேர் காயம் அடைந்ததாக உள்ளுர் அதிகாரி ஒருவர் கூறினார்.

நிலச்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும் இன்னும் பல வீடுகள் முற்றாக சேதம் அடைந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மியன்மாரில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் நீர் நிரம்பி வழிவதாகவும் பல இடங்களில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் குடியிருப்பாளர் ஒருவர் தன் இரு மகள்களையும் உறவினர்களையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.

மிகப் பெரிய சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்தபோது தனது வீடு மண்ணில் புதைந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாக 42 வயது டாய் வின் என்பவர் கூறினார்.

Mon, 08/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை