தற்கொலை தாக்குதல்களில் காசாவில் 3 பொலிஸார் பலி

காசா பகுதியில் தற்கொலை தாக்குதல்களில் மூன்று பொலிஸார் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பின்னேரம் பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாடில் இருக்கும் காசாவின் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காசாவில் பலம்மிக்க போராட்டக் குழுவாக ஹமாஸ் இருக்கும் நிலையில் அந்தப் பகுதியில் இவ்வாறான தாக்குதல்கள் மிக அரிதானதாக பார்க்கப்படுகிறது.

இந்த தாக்குதலின் பின்னணியை கண்டறிவதில் பாதுகாப்பு படையினர் முன்னேற்றம் கண்டிருப்பதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் இயாத் அல் பொசொம் குறிப்பிட்டபோதும் அது தொடர்பில் அவர் விபரம் அளிக்கவில்லை.

“தீய கரங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குற்றச் செயல்கள் தண்டனை இன்றி தப்பிக்க முடியாது” என்று பொசொம் குறிப்பிட்டார்.

பொலிஸ் சோதனைச் சாவடியை கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் அது அழிந்ததாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதில் இரு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதோடு மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார. எனினும் கொல்லப்பட்டவரில் சைக்களை ஓட்டிவந்தவர் இருக்கிறாரா என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

நகரில் மற்றொரு இடத்தில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்றில் இடம்பெற்ற இரண்டாவது குண்டு வெடிப்பில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களை காசா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடும் என்று ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியான் குறிப்பிட்டுள்ளார். “அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்வரப்படும் என்பதோடு இந்த குண்டு தாக்குதல்களில் தொடர்புபட்டவர்கள் இதற்கு பொறுப்புக்கூறப்படும்” என்று குறிப்பிட்டார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசின் படையுடனான சிவில் யுத்தத்தின் பின் 2007 இல் காசாவை ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. எனினும் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுக்களுடன் தொடர்புபட்ட கடும்போக்கு குழுக்கள் ஹமாஸை எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் ஐ.எஸ் அனுதாபிகள் இந்த தற்கொலை தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் பலஸ்தீன அதிகாரிகள் இஸ்ரேல் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை