ஆப்கான் வீதியோர குண்டுவெடிப்பில் பஸ்ஸில் இருந்த 35 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற வீதி ஓர குண்டு வெடிப்பில் பஸ் வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 35 பேர் உயிரிழந்ததோடு மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

தலிபான்கள் மற்றும் இஸ்லாமி அரசு குழு ஆப்கான் படையினர், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நாளாந்தம் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அந்நாட்டில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்துள்ளது.

ஹரத் மாகாண தலைநகர் மற்றும் கந்தஹார் நகரை இணைக்கும் பிரதான விதியின் பராஹ் மாகாணத்தின் அப் கொர்மா என்ற பகுதியிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் மொஹிபுல்லா மொஹிப் குறிப்பிட்டார்.

“தலிபான் தாக்குதல்தாரிகளால் ஆப்கான் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து புதிதாக இந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது” என்று அவர் குறிப்பிட்டார். இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களே அதிகம் உயிரிழந்திருப்பதோடு காயமடைந்துள்ளனர்.

எனினும் இந்த தாக்குதல் தொடர்பில் எந்தத் தரப்பும் உடன் பொறுப்பேற்கவில்லை.

எனினும் அங்கு தமது போராளிகள் நிலக்கண்ணி வெடிகளை புதைக்கவில்லை என தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.

“இந்த வெடிப்பு தலிபான்களால் நடத்தப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து நாம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அதன் பேச்சாளர் சுபைஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். தலிபான்கள் மற்றும் அமெரிக்க தரப்புகளுக்கு இடையில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கும் வேளையிலேயே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் தலிபான்களின் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கு பகரமாக வெளிநாட்டு துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை ஒன்று எட்டப்படலாம் என்று நம்பப்படுகிறது.

எனினும் இந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலத்தில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் 2019 ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களைவிட ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட மக்கள் அதிகம் என்றும் ஐ.நா புள்ளிவிபரத் தகவல் தெரிவிக்கிறது.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை