வடமாகாண ஆசிரியர்களின் 3 வருட சேவைக் காலத்தை சேர்த்துக்கொள்ள பணிப்பு

வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களது சேர்த்துக்கொள்ளாது விடப்பட்ட 3 வருட சேவைக் காலத்தையும் சேர்த்துக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பணிப்புரை விடுத்துள்ளார்.  

வடக்கு கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டு அதற்கமைவாக அரச பாடசாலைகளில் சேவையாற்றிய ஆசிரியர்களின் மூன்று வருட சேவைக் காலம் சேர்த்துக்கொள்ளப்படாமையைச் சுட்டிக்காட்டியே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.  

யுத்தப் பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 514ஆசிரியர்களது மூன்று வருட சேவைக் காலமே வடமாகாணக் கல்வி அமைச்சினால் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 

கடந்த 2013.07.01அன்றைய தினம் முதல் வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டு பாடசாலைகளில் ஆசிரியப் பணிக்கமர்த்தப்பட்டுள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 514ஆசிரியர்களது 3வருட சேவைக் காலத்தைச் சேர்த்துக்கொள்ளாது அவர்களை 2016.08.01முதல் நியமிக்கப்பட்டதாகக் கருதி அவர்களது சேவைக் காலம் கணிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இது தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் பலரிடமும் முறையிட்டுள்ளனர்.  

தமக்கு நீதி கிடைக்காத நிலையில் இறுதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.  

 அதற்கமைவாக அவர்களது கோரிக்கைகளை ஆராய்ந்து அறிந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைக்கு அமைவாக, வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டு பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய 3வருட சேவைக் காலத்தையும் ஆசிரியர்களது சேவைக்காலத்துடன் சேர்த்துக்கொள்ள உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளார். 

 இவர்களது 3 வருட சேவைக் காலம் சேர்த்துக் கொள்ளப்படாதமையால் அண்மையில் நடைபெற்ற அதிபர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்குக் கூட சேவைக் காலம் போதாது எனக்கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Sat, 08/03/2019 - 09:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை