23 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய கரப்பந்தாட்ட போட்டிகள் இன்று ஆரம்பம்

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், டயலொக் ஆசியாட்டாவின் அனுசரணையில் முதல் முறையாக இடம்பெறும் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (17) ஆரம்பமாகவுள்ளது.

இளம் வீரர்களின் திறமைகளை இனம்காணும் முகமாக முதல் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரானது, முன்னர் இடம்பெற்ற டயலொக் ஜனாதிபதி கிண்ண தங்கக் கிண்ண 22 வயதின் கீழ் பிரிவனருக்கான தொடருக்குப் பதிலாக நடத்தப்படுகிறது.

இத்தொடருக்கான வெற்றிக் கிண்ணத்தினை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள மிஹிலக மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆண்கள், மகளிர் என இரு பாலாருக்குமான இந்தப் போட்டித் தொடர் மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என இரண்டு கட்டங்களாக இடம்பெறும்.

அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும் போட்டிகளின் நிறைவில் மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகும்.

அதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து 2 ஆண்கள் அணிகளும், 2 மகளிர் அணிகளும் என மொத்தம் 4 அணிகள் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறும்.

போட்டித் தொடர் இன்று கொழும்பு விகார மாகாதேவி பூங்காவில் இடம்பெறும் போட்டிகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும்.

சுமார் 3 மாதங்களுக்கு இடம்பெறும் இப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிகள் மஹரகமையில் உள்ள இளைஞர் சேவைகள் மன்ற உள்ளக அரங்கில் இடம்பெறும்.

இம்முறை போட்டித் தொடருக்கு நாடு பூராகவும் இருந்து 1600 இற்கும் அதிகமான அணிகள் பங்கு கொள்ளும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொடரில் பங்கு கொள்ள விரும்புகின்ற அணிகள் இலங்கை கரப்பந்து சம்மேளனத்திற்கு, தமது மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அல்லது இலங்கை கரப்பந்து சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை