அட்டாளைச்சேனை அல் முனீறாவில் ரூ. 22 மில். செலவில் புதிய கட்டடம்

கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் ஆரம்பப்பிரிவு வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முன்தினம் (04) பாடசாலையின் ஆரம்பப்பிரிவு வளாகத்தில் அதிபர் எம்.எச்.எம்.றஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு இணைத்தலைவருமான ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும்,கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ்,அட்டாளைச்சேனை ஜும்ஆப்பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஜுனைதீன், அல்-முனீறா பெண்கள் உயர்பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் ஏ.பீ.ஏ.கபூர் உட்பட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்,அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திக் குழுவினரின் முயற்சியின் பயனாக இப்பாடசாலையின் ஆரம்பப்பிரிவிற்கான இரு வகுப்பறைக் கட்டிடத்திற்கான நிதி கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

 

Tue, 08/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை