அமெரிக்காவில் 21 வயது இளைஞன் துப்பாக்கிச் சூடு

20 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள எல் பசோ எனும் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 26 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“டெக்சாஸின் வரலாற்றில் இது மிகவும் மோசமான தினங்களில் ஒன்று” என்று இந்த தாக்குதல் குறித்து அம்மாநில ஆளுநர் கிரெக் அபாட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லைக்கு அருகே உள்ள “சியில்லோ விஸ்டா மோல்” எனும் வணிக வளாகத்தை ஒட்டியுள்ள வோல்மார்ட் கடையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய ஒரே தாக்குதலாளியாக கருதப்படும் 21 வயதான ஒருவரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். பொலிஸாரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அம்மாநில ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள துப்பாக்கிதாரியின் பெயர் பேட்ரிக் கிருசிஸ் என்றும் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1,046 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள டலாஸ் நகரைச் சேர்ந்தவர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவான சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் அடர் நிற மேலாடையை உடுத்தியுள்ள நபர், கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

அதிகாரிகள் கைது செய்த ஆடவர் வெறுப்புணர்வு காரணமாக அந்தக் குற்றத்தை புரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்வதால், உயிரிழந்தவர்களின் சடலங்கள் சம்பவ இடத்திலேயே விட்டுவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று கூறினர்.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி செய்து வருவதாக டெக்சாஸ் ஆளுநர் கூறினார். உயிரிழந்தவர்களில் மூவர் தங்கள் குடிமக்கள் என்று மெக்சிகோ கூறியது.

இதனை ஒரு கோழைத்தனமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டித்துள்ளார்.

“இது துயரம் நிறைந்த சம்பவம் மட்டுமல்ல கோழைத்தனமான செயல். இந்த வெறுப்பு நிறைந்த நிகழ்வைக் கண்டிப்பதில் நான் ஒட்டுமொத்த நாட்டுக்கு ஆதரவாக இருப்பேன். அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை நியாயப்படுத்தக் கூறப்படும் எந்தக் காரணங்களும் சரியல்ல” என்று டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

6 நாட்களுக்கு முன்னதாக, வடக்கு கலிபோர்னியாவில் பதின்ம வயது இளைஞர் ஒருவர், உணவுத் திருவிழாவில் 3 பேரை சுட்டுக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.

2017 நவம்பர் மாதம் டெக்சாஸ் தேவாலயம் ஒன்றில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வோல்மார்ட் வணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதற்கு அடுத்து நிகழ்ந்திருக்கும் மிக மோசமானதாகும்.

Mon, 08/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை