அமெரிக்க குடியுரிமையை ஏப்ரல் 17 இல் துறந்துவிட்டேன்

தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை

அமெரிக்க குடியுரிமையை கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியே துறந்துவிட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எவ்வித தடைகளும்

இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (வியாழக்கிழமை) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

அமெரிக்க குடியுரிமையை கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியே நான் துறந்துவிட்டேன். தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளேன்.

எனது குடியுரிமை தொடர்பில் தொடர்ந்து சிலர் கருத்துகளை வெளியிட்டு வருவதுடன், வழக்குகளையும் தாக்கல் செய்கின்றனர். ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் பொய்யான குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன.

ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடையும் இல்லை. தேர்தல் வெற்றிக்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என்றார்.

இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தாநந்த அழுத் கமகே உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை