ஆசிய அபிவிருத்தி வங்கி 161 டொலர் நிதியுதவி

ரயில்வே அபிவிருத்தி

ரயில்வே சேவையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 161 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

முழுமையான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் இன்றையதினம் (20) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

28,920 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான

இந்த நிதியுதவி 29 வருடங்களுக்கான கடனாக வழங்கப்படவிருப்பதுடன், இதில் ஒரு மில்லியன் டொலர் மீளச்செலுத்தத் தேவையற்ற நன்கொடையாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் இந்தக் கடனானது 29 வருடங்களில் மீளச்செலுத்தவேண்டியதுடன், இது 8 வருட சலுகைக்காலத்தைக் கொண்ட 0.5 வீத (+LIBOR) வட்டியைக்கொண்ட கடனாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி, ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னான்டோ, திட்டப் பணிப்பாளர் சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இந்தக் கடனுதவியின் ஊடாக 'களனிவலி' ரயில்பாதை விஸ்தரிப்பு, கொழும்பு-ரம்புக்கனை பிரதான பாதை புனரமைப்பு, கரையோர ரயில்பாதை புனரமைப்பு, புத்தளம் வரையிலான புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக கொழும்பிலிருந்து அவிசாவளை வரையிலான 'களனிவலி' ரயில்பாதை புனரமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும். அதன் தொடர்ச்சியாக படிப்படியாக ரயில்வே சேவையில் புனரமைப்புக்கள் மறுசீரமைப்புக்கள், புதிய தொழில்நுட்ப உள்வாங்கல்கள் எனப் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ரயில்வே சேவையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம். சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் புதிய ரயில்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல ரயில் இஞ்சின்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இந்தப் புதிய ரயில் கொள்வனவுகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக சிறந்த ரயில்வே சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 08/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை