பங்களாதேஷ் சேரி பகுதியில் தீ: 15,000 வீடுகள் கருகின

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஏற்பட்ட கடும் தீச்சம்பவத்தில் சுமார் 15,000 வீடுகள் சேதமடைந்தன.

50,000 பேர் அதனால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சலந்திக்கா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீச்சம்பவம் ஏற்பட்டது. தீயணைப்பாளர்கள் 6 மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்த விசாரணை நடைபெறுகிறது. பல வீடுகளில் பிளாஸ்டிக் கூரைகள் இருந்தன. தீ வேகமாகப் பரவியதற்கு அவை காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அங்கு குடியிருப்போரில் பெரும்பாலோர் குறைந்த சம்பளம் ஈட்டுவோர். தீச்சம்பவம் ஏற்பட்டபோது ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்துகொள்ள பலர் சென்றிருந்தனர்.

தங்க இடமில்லாமல் தவிப்போருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த பெப்ரவரி மாதம், குடிசைகள் நிறைந்த பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதில் 81 பேர் பலியானதும், மார்ச் மாதம் அடுக்குமாடி கட்டடங்கள் தீப்பற்றியதில் சுமார் 25 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Mon, 08/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை