இலங்கை 144/6 ஓட்டங்கள்

சீரற்ற காலநிலையால் 2ம் நாள் ஆட்டம் மதிய போசன இடைவேளை வரை மாத்திரம் நடைபெற்றது

 நியூசிலாந்து அணியுடனான 2 ஆவது டெஸ்ட்

இலங்கை -- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நிறைவில் இலங்கை அணி, 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் மதிய போசன இடைவேளை வரை மாத்திரமே நடைபெற்றது.

சீரற்ற காலநிலையால் போட்டி தாமதமாகியதில், காலை 9.45 இற்கு ஆரம்பமாகவிருந்த போட்டி 10.30 இற்கு ஆரம்பமாகியது. முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய இலங்கை அணி அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் துடுப்பாட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்தது.

மெத்திவ்ஸ் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், 49 ஓட்டங்களை பெற்றிருந்த திமுத் கருணாரத்ன தனது 23வது டெஸ்ட் அரைச் சதத்தை கடந்தார்.

கருணாரத்ன ஓட்டங்களை குவித்த நிலையிலும், மெத்திவ்ஸ் 2 ஓட்டங்களுடன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ட்ரென்ட் போல்ட், பௌன்சர் பந்தின் மூலமாக மெதிவ்ஸை ஆட்டமிழக்கச் செய்ய, அதே ஓவரில் வந்த வேகத்தில் குசல் பெரேரா எல்பிடபிள்யு முறையில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிக்கப்பட, இலங்கை அணி 93 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. குறித்த இரண்டு விக்கெட்டுகளின் பின்னர், ஜோடி சேர்ந்த திமுத் கருணாரத்ன மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் 37 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களுடன் டிம் சௌதியின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நிரோஷன் டிக்வெல்ல ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தனஞ்சய டி சில்வா மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் களத்தில் நிற்க மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டது.

இந்த இடைவேளையின் போது, இலங்கை அணி 144 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆனாலும், மதியபோன இடைவேளையில் மழை குறுக்கிட்டதால், போட்டி நிறுத்தப்பட்டது. அதேநேரம், போட்டியில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை தொடர்ந்ததால் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று 29.3 ஓவர்கள் வீசப்பட்டுள்ளதுடன், இரண்டு நாட்களிலும் மொத்தமாக 66 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டுள்ளன. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகும்.

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை