மலையக அபிவிருத்தி மன்றத்தின் 13 ஆவது வருட பூர்த்திவிழா

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்த 13 ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றி இயங்கி வருகின்றது. கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள அதன் தலைமையகத்தில் நேற்று 13 வருடப் பூர்த்தி விழாவும், மலையக பாடசாலைகளுக்கு உதவித் திட்டங்களும் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் முத்துசாமி தேவராசன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பேராசிரியர் சந்திரபோஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் சட்டத்தரணி சேனாதிராஜா, மேல்மாகாணசபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, பணிப்பாளர் எல்.எஸ் மோகன்ராஜ் ஆகியோரும் உரையாற்றினார்கள். மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கொழும்பில் வாழும் மலையக இளைஞர்கள், நலன் விரும்பிகள் நிதிகளைச் சேர்த்து அதன் ஊடாக மலையகப் பகுதியில் வாழும் வறிய மாணவர்களுக்கு கல்விக்காக 8000க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்கள், உயர்கல்வியைத் தொடர உதவித் திட்டங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.

மாத்தளை, இரத்தினபுரி, ஹற்றன் ஆகிய பின்தங்கிய பாடசாலைகளின் அதிபர்கள் 13பேரை அழைத்து போட்டோ கொப்பி மெசின்கள், கணனி, பாடசாலைக்கு நீர் விநியோகத் திட்டம் புரொஜக்டர், போசகர்கள் நலன் விரும்பிகளினால் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகம் பயிலும் மாணவி ஒருவருக்கு மடிக்கணனியும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

செட்டியார் தெரு வியாபாரிகளும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அத்துடன் மலையக இளைஞர்கள் தமது மாதாந்த சம்பளத்திலும் ஒரு சிறிய தொகையை வழங்கி அதன் ஊடாக மலையக வாழ் மாணவர்களது உயர்கல்விக்கு வித்திட்டு வருகின்றனர்.

 

தெஹிவளை, கல்கிசை விசேட நிருபர்

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை