மாத்தறை, தெனியாய பகுதியில் 1,260 அபி. திட்டங்கள் முன்னெடுப்பு

அபிவிருத்தி மீளாய்வு  கூட்டத்தில் அமைச்சர் சாகல

மாத்தறை மாவட்டம் மற்றும் தெனியாய தொகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் (27)மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளை துரிதகதியில் நிறைவு செய்யுமாறு இக்கூட்டத்தின் போது அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தற்சமயம் மாத்தறை மாவட்டம் மற்றும் தெனியாய தேர்தல் தொகுதியில் 1260 திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீர் விநியோக திட்டம், பாலங்களை அமைத்தல், பாதைகளுக்கு கார்பட் இடுதல், கிராமங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல், தென் வலய அபிவிருத்தி செயற்பாடுகள், சிங்கராஜ விசேட ஒன்றினைந்த அபிவிருத்தி திட்டம் மற்றும் கம்பெரலிய துரித அபிவிருத்தி திட்டம் உள்ளடங்கலான பல அபிவிருத்தி திட்டங்கள் மாத்தறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் 226 திட்டங்களின் அபிவிருத்தி பணிகளே நிறைவடைந்துள்ளதுடன் ஏனைய அபிவிருத்தி பணிகள் தற்சமயம் நடைமுறையிலுள்ளது. இவ் வனைத்து திட்டங்களுக்காக 2,412 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அபிவிருத்தி பணிகளை துரிதகதியில் நிறைவுச்செய்து மக்களுக்கு கையளிப்பது எம் அனைவரதும் பொறுப்பாகுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசாங்க அதிகாரிகள் கலந்துக்கொண்டதுடன் எதிர்வரும் வாரங்களில் மாத்தறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு விசேட கூட்டமொன்றை ஒழுங்குச் செய்யுமாறு அமைச்சர் மாத்தறை மாவட்ட செயலாளருக்கு அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கினார்.

 

 

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை