வடக்கு, கிழக்கில் 100 வீதமான ஆதரவு ஜ.தே முன்னணிக்கே

கோட்டாவை வேட்பாளராக அறிவித்ததால் வெற்றி உறுதி

வடக்கு, கிழக்கில் 100 வீதமான வாக்குகள் இம்முறை ஜனநாயக தேசிய முன்னணிக்கே கிடைக்கப்பெறும். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை வேட்பாளராக்கியதன் மூலம் எமது வெற்றியை இவர்கள் 100 வீதம் உறுதி செய்துள்ளனர் என்று சுகாதாரம், போஷாக்கு மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழ் மக்கள் வைராக்கியம் கொள்ள யுத்தம் மாத்திரம் காரணமல்ல. யுத்தத்தின் பின்னரும் இவர் அந்த மக்களை வாழவிடவில்லை என்றும் அவர் கூறினார். அமைச்சர் ராஜித சேனாரட்ன தினகரனுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் நான் வடக்கிற்கு மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தேன்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முழு வடக்கும் எழுந்துள்ளது. அவர்களுக்கு எம்முடன் பிரச்சினையிருந்தது. ஆனால், அவற்றை மறந்து ஓர் அணியில் அனைவரும் கோட்டாவுக்கு எதிராக திரண்டுள்ளனர்.

கிழக்கிலும் அவ்வாறுதான். வடக்கு,கிழக்கில் 100 வீதமான வாக்கு இம்முறை எமக்குதான் கிடைக்கும்.

கோட்டாவை வேட்பாளராக நியமித்ததன் மூலம் எமக்கு இலகுவாக வெற்றியடைய வழிவகுத்துள்ளனர்.

சிறுபான்மையினர் கோட்டாவை தோற்கடிப்பதில் உறுதியாகவுள்ளனர். அவர்களது

ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டமை, படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை என அராஜகங்களையே அரங்கேற்றியிருந்தனர்.

யுத்தம் காரணமாக அல்ல யுத்தத்தின் பின்னரும் தமிழர்களை அவர்கள் இந்த நாட்டில் வாழவிடவில்லை. யுத்தம்தான் காரணம் என்றால், சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் ஆதரித்திருக்க மாட்டார்கள். கோட்டா மீது அவர்கள் வைராக்கியமே வைத்துள்ளனர்.

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எவ்வாறான திறமைகளை வெளிகாட்டினாலும், இறுதியில் இரண்டு அணிகள்தான் களத்தில் இருக்கும். அந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் வெற்றிபெறும். இதுதான் உலகளாவிய நடைமுறையும், யதார்த்தமும். மூன்றாவது சக்தி இல்லாதுபோகும். கோட்டாவுக்கு ஆதரவு, கோட்டாவுக்கு எதிர்ப்பு இன்றுதான் நிலைமை மாறும். கோட்டாவை தோற்கடிக்க ஜே.வி.பியினரும் இறுதியில் எமக்கு வாக்களிப்பார்கள்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலில் தோல்வியடையும் தீர்மானங்களைதான் எடுப்பார். ஒருபோதும் வெற்றியடையக் கூடிய பணியை அவர் முன்னெடுத்ததில்லை. அவரை வெற்றிபெற செய்யும் பணியை நாம்தான் செய்திருந்தோம். மாகாண சபைத் தேர்தலிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 08/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை