ஆஷஸ் தொடரை வெல்ல பென் ஸ்டோக்ஸை பிரகாசிக்க விடாமல் தடுக்க வேண்டும்

பொண்டிங்

கிரிக்கெட் உலகின் போர் என வர்ணிக்கப்படும் ஆஷஸ் தொடரை வெல்ல, இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை பிரகாசிக்க விடாமல் தடுக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளரும், முன்னாள் தலைவருமான ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும், ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், உலகக்கிண்ணத்தை முதல் முறை ஏந்திய உற்சாகத்துடன், ஆஷஸ் தொடரிலும் சாதித்து விட வேண்டுமென்ற ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

மறுமுறை உலகக்கிண்ணத்தை தவறவிட்டாலும், ஆஷஸ் தொடரை கைப்பற்றியே ஆவோம் என்ற வேட்கையில் அவுஸ்ரேலியா அணி உள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஆஷஸ் தொடர் குறித்து ரிக்கி பொண்டிங் கருத்து தெரிவிக்கையில்,

“பென் ஸ்டோக்ஸ் தற்போது விளையாடும் விதம் நிறைய முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அவர் எப்போதும் ஒரு அவசரத்தில் இருப்பார், ஆனால் தற்போது நிதானம் அவரிடம் பிறந்துள்ளது.

அவரது ஆளுமையைப் பார்க்கும் போது பெரிய, வலிமையான, கோபமான ஒரு வீரராகவும் கொஞ்சம் ஈகோ அதிகமுள்ளவராகவும் தெரிகிறது. இளம் வீரராக இவை அவசியமான சில குணாம்சங்களாகும்.

ஆனால் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவர் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன் துடுப்பாட்டத்தை மாற்றிய விதம் அவரிடம் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

மேலும் தன் துடுப்பாட்டத்தை அவர் புரிந்து கொள்வதாகவும், அணிக்குத் தேவையானதை புரிந்து கொண்டதாகவும் எனக்குத் தெரிந்தது. அவருடைய இந்த மாற்றம்தான் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாகப் போகிறது என்று நினைக்கிறேன். ஃப்ரெட்டி அல்லது பிளிண்டாஃப் போன்று ஒரு பெரிய வீரராக இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.இங்கிலாந்து அணியின் உண்மையான இருதயத் துடிப்பாக இருக்கிறார் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து எப்போது பிரச்சினைகளைச் சந்தித்தாலும் அவர்களுக்கு ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது, இப்படிப்பட்ட வீரர்கள் அவர்களுக்குக் கிடைக்கிறார்கள்.

ஆஷஸ் தொடரை வெல்ல வேண்டுமெனில், அவுஸ்திரேலிய அணியினர், பென் ஸ்டோக்ஸை பிரகாசிக்க விடாமல் தடுக்க வேண்டும்” என கூறினார்.

12ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி, முதல் முறையாக உலகக்கிண்ணத்தை ஏந்துவதற்கு, பென் ஸ்டோக்ஸின் துடுப்பாட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பாடுபட்ட அவருக்கு இறுதிப் போட்டியில், ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

44 ஆண்டு கால உலகக்கிண்ண வரலாற்றில், இங்கிலாந்து முதல் முறையாக சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Sat, 07/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை