இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் வெளிநாடுகள் கால்பதிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவோ நோர்வேயோ தலையிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல்வேறு நாடுகளும் தமது சுயதேவைகளுக்காக எமது நாட்டில் கால்பதிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.  மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கைகள் நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  சிறுபான்மை மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் இன்றைய ஜனாதிபதியை கொண்டு வந்தனர். ஆனால் இன்று சிறுபான்மை மக்கள் அவர் மீது நம்பிக்கையிழக்கும் வகையில் அவரது செயற்பாடுகள் காணப்படுகின்றன.  

போதையற்ற நாட்டில் தான் சுயசிந்தனையுடைய ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜனாதிபதி மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு கையொப்பம் இட்டுள்ளார்.  

கடுமையான குற்றங்களை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலையேற்பட்டாலும் சிலவேளைகளில் அப்பாவிகளின் உயிர்களைக்கூட காவுகொள்ளப்படும் நிலையேற்படலாம்.மறுக்கப்பட்ட சுதந்திரத்திற்காக போராடிய விடுதலை வீரர்களுக்கும் இந்த மரண தண்டனை சென்றடையக்கூடிய நிலையுருவாகலாம்.சில நாடுகளில் மரண தண்டனைக்கு பதிலாக சீர்திருத்த தண்டனை அமுல்படுத்தப்படுகின்றது.மரண தண்டனை என்கின்ற விடயம் ஆழமாக பரிசீலிக்க வேண்டியது.   

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.எந்தச் செயல் நடைபெற்றாலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. எந்த இனமாக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.  

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்  

Sat, 07/06/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை