தென்கயிலை ஆதீனத்திற்கு நடந்தது பௌத்த பிக்குக்கு நடந்திருந்தால் நிலைமை என்ன?

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது, சிங்களக் காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல் பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

 கம்பனிகள் திருத்தச் சட்டமூல விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் .மேலும் கூறுகையில்,

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனத்தை, பேச்சுவார்த்தை நடத்த பொலிஸார் அழைத்துச் சென்றனர். பொலிஸாரின் முன்னிலையில் அவர் மீது காடையர்கள் தேயிலைச்சாய சுடுநீரை ஊற்றினர். இது தொடர்பில் இன்றுவரை பொலிஸ் திணைக்களமோ அல்லது சம்பவ இடத்திலிருந்த பொலிஸாரோ எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் தேயிலைச்சாய சுடுநீரை ஊற்றினர் என்பதும் பொலிஸாருக்கு தெரியும்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல், பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்.. தமிழர்களுக்கு எந்த அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பார்களா?அந்த தைரியம் வந்திருக்குமா ?இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்ற நினைத்துக் கூடப்பார்த்திருப்பார்களா?

தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வாய் திறக்கவில்லை.அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பம் வர வேண்டும் இதனை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என அரசு கருதுகிறதா? கத்தோலிக்க இந்து மக்களை பிரித்து குளிர்காயவும் முயற்சி நடைபெறுகிறது.

திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் மிக விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும்.

திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் மன்னார் ஆயருடன் நான், பேசினேன். இவ்விடயத்தில் இணக்கமான தீர்வு காணப்பட வேண்டுமென அவரிடம் கோரினேன். இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரித்தாள யாருக்கும் இடமளிக்க முடியாது. எனவே திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் மிக விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டபோது அந்த இடத்துக்கு கிறிஸ்தவ மதகுருமாரும் சென்று இந்துக்களுக்கு ஆதரவு வழங்கினர். இதன்போது அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் ,திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்கள் வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் எதிர்ப்புக் காட்டிவிட்டு இங்கு வந்து வெளி வேஷம் போடவேண்டாமென்றார்.

இந்து-கிறிஸ்தவ மக்களை பிரித்தாளும் முயற்சிக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது.ஆயுத போராட்ட காலத்திலும் நாம் ஒற்றுமையாகவே செயற்பட்டோம் என்றார்.

 

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை