இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் டிரம்ப் - கிம் இடையே திடீர் சந்திப்பு

இரு கொரியாக்களையும் பிரிக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னை சந்தித்து கைலாகு கொடுத்தார்.

கிம்மை சந்தித்த பின் இராணுவம் விலக்கப்பட்ட அந்த வலயத்தில் டிரம்ப் வட கொரியாவின் பக்கம் சென்றதோடு, பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு வட கொரியா பக்கம் செல்வது இது முதல் முறையாகும்.

எனினும் இதனை வெறுமனே ஒரு அரசியல் நடாகம் என்று ஆய்வாளர்கள் விமர்சித்தபோதும், இது எதிர்கால பேச்சுவார்த்தை ஒன்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக மேலும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

டிரம்ப் மற்றும் கிம்மிற்கு இடையில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக்களைவு குறித்த கடைசி பேச்சுவார்த்தை எந்த முன்னெற்றம் இன்றி முடிவடைந்தது. இந்நிலையில் இந்த இரு தலைவர்களும் ஓர் ஆண்டு காலத்திற்குள் மூன்றாவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டுள்ளனர். 1953 ஆம் ஆண்டு கொரிய யுத்தம் முடிவுற்றது தொடக்கம் இரு கொரியாக்களும் பிரிக்கப்பட்ட பதற்றம் கொண்ட பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தப்பது.

தென் கொரியா சென்ற டிரம்ப், கிம்முடனான சந்திப்புக்கு ட்விட்டரில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்தே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது இருவரும் எல்லைக் கோட்டின் எதிர் எதிர் திசையில் இருந்து கைலாகு கொடுத்ததோடு, அதனைத் தொடர்ந்து டிரம்ப் வட கொரியா பக்கம் குறுகிய நேரம் கால் வைத்தது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

1953 இராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பல அமெரிக்க ஜனாதிபதிகளும் பயணித்திருந்தபோதும், அவை பெரும்பாலும் தென் கொரியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்துவதாகவே இருந்தன.

இந்த பயணத்தின் பண்பை மாற்றிய டிரம்ப் தொலைகாட்டி மற்றும் குண்டு ஜக்கட் இன்றி சாதாரண ஆடையில் சென்றார்.

“இது சிறந்த கெளரவமாகும். பல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. குறிப்பாக இது ஒரு சிறந்த நட்புறவாகும்” என்று வட கொரிய தலைவரிடம் டிரம்ப் குறிப்பிட்டார். “இது உலகத்திற்கு சிறந்த தினமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு புன்னகைத்தபடி பலளித்த கிம், “துரதிருஷ்டமான கடந்த காலத்தை நீக்கி புதிய எதிர்காலம் ஒன்றில் நுழைவதற்கான அவரது எதிர்பார்ப்பை இது காட்டுவதாக நான் நம்புகிறேன்” என்றார்.

இரு தலைவர்களும் கைலாகு கொடுத்த பின் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னும் அங்கு இணைந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து தென் கொரியா பக்கம் வந்த கிம், டிரம்ப்புடன் இணைந்து ஊடகங்களுக்கு மிக அரிதான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தனக்கும் டிரம்புக்கும் இடையில் இருக்கும் சிறந்த நட்பின் அடையாளமாக இந்த சந்திப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையே இருக்கும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்கு பயணம் செய்யவிருந்தார் டிரம்ப். ஆனால் மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் ரத்துச் செய்யப்பட்டது.

பெப்ரவரி மாதம் வியட்நாமில் உள்ள ஹனோயில், இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்ததிலிருந்து வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை.

வட கொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவது தொடர்பான இரண்டாவது பேச்சுவார்த்தை எந்தவித ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்தது.

வட கொரியா அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என அமெரிக்கா தெரிவிக்கிறது. தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை விலக்க வேண்டும் என வட கொரியா கேட்கிறது.

4 கி.மீ அகலத்தில் 250 கி.மீ தூரத்துக்கு இந்த இராணுவம் விலக்கப்பட்ட பகுதி உள்ளது. எனினும் அதனை தாண்டியுள்ள பகுதி உலகிலேயே அதிகப்படியான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள ஒரு எல்லை பகுதியாகும்.

இராணுவம் விலகப்பட்ட பகுதியின் இருபுறமும் உள்ள கூட்டு பாதுகாப்பு பகுதியில் தான் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும்.

இதுவரை எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் இந்த பகுதிக்குள் வந்ததில்லை. பில் கிளிண்டன் ஒருமுறை “இது பூமியில் மிகவும் பயங்கரமான ஓர் இடம்” என குறிப்பிட்டிருந்தார்.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை