தர்மசேனவின் இறுதிப் போட்டி முடிவுக்கு ஐ.சி.சி ஆதரவு

உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு பதில் ஆறு மேலதிக ஓட்டங்களை வழங்கியதாக சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் நடுவர் குமார் தர்மசேனவுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி வெளிப்படையாக அறிவிப்பு ஒன்றை வெளியிடுவது இது முதல் முறையாகும்.

கடந்த ஜூலை 14 ஆம் திகதி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 3 பந்துகளில் 9 ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்டபோது, ஓட்டத்தின்போது மட்டையில் பந்து பட்டு பெளண்டரிக்கு சென்றதை அடுத்து ஆறு மேலதிக ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

எனினும் போட்டி நடுவர் மரைஸ் எரஸ்முஸ் மற்றும் ஏனைய போட்டி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் கூட்டாக இந்த முடிவை எடுத்ததாக தர்மசேன விளக்கம் அளித்திருந்தார்.

“அந்தப் பந்தின்போது எல்லோரும் ஒன்றிணைந்து முடிவை எடுத்தனர். முடிவு எடுக்கும்போது சரியான நடைமுறையையே அவர்கள் பின்பற்றினர்” என்று ஐ.சி.சி கிரிக்கெட் பொதுமுகாமையாளர் ஜெப் அல்லர்டிக் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் முடிவை எடுக்கும்போது அப்போது துடுப்பாட்ட வீரர் எல்லைக் கோட்டை கடந்தாரா இல்லையா என்பது பற்றிய விதியை தெரிந்தே இருந்தார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை