சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடர்; கொழும்பு அணி சம்பியன்

அணித் தலைவர் கமில் மிஷார மற்றும் அஹன் விக்ரமசிங்கவின் அபார சதங்களின் மூலம் தம்புள்ளை அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்ட சுப்பர் ப்ரொவின்ஷியல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணி வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தின் (23) நடைபெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கொழும்பு அணி 31 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கொழும்பு, ஸாஹிரா கல்லூரியின் மொஹமட் ஷமாஸ் 14 ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிஷார மற்றும் விக்ரமசிங்க இருவரும் 161 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்போது மிஷார 114 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 120 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் ஆட்டமிழக்காது கடைசி வரை களத்தில் இருந்த அஹன் விக்ரமசிங்க 116 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 127 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் கொழும்பு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணியின் ஆரம்ப வரிசை வீரர்கள் நின்றுபிடித்து ஆடவில்லை. ஆரம்ப வீரர்களான சுபுன் சுமனரத்ன 35 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனதோடு மறுமுனையில் அணித்தலைவர் நிபுன் தனன்ஜய 26 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசை வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க தம்புள்ளை அணி 139 ஓட்டங்களை பெறுவதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நெருக்கடியான நேரத்தில் ஜோடி சேர்ந்த தினெத் ஜயகொடி மற்றும் லக்ஷான் கமகே 7 ஆவது விக்கெட்டுக்கு வேகமாக 91 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டபோதும் அது தம்புள்ளை அணியின் வெற்றி வாய்ப்புக்கு போதுமாக இருக்கவில்லை. இதன்போது ஜயகொடி 51 ஓட்டங்களையும் கமகே 50 பந்துகளில் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜயகொடி ஆட்டமிழந்து 12 ஓட்டங்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளையும் தம்புள்ளை அணி பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 42.5 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கொழும்பு அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய டில்மின் ரத்னாயக்க கொழும்பு அணிக்காக 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை