கிடப்பில் கிடந்த காணி உரிமம் வழங்கும் திட்டத்திற்கு நாமே உயிரூட்டினோம்

மலையக புரட்சிப் பயணத்தை எச்சக்திகளாலும் தடுக்க முடியாது

“கிடப்பில் கிடந்த பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு காணி உரிமம் வழங்கும் செயற்றிட்டத்துக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனே புத்துயிர் கொடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியிலுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்திம் (20) நடந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியதாவது:

“மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது எமது பிரதான இலக்காகும்.

இதனாலே அபிவிருத்திகளுக்கும், உரிமை அரசியலுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றோம்.

பெருந்தோட்டப் பகுதிகளில் யார் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் அதற்கு முழு ஆதரவையும் வழங்குவோம். ஒருவரால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை அவரை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு மற்றொருவருக்கு புகழ்தேட முயற்சிப்பது அநாகரீகமாகும். சமூக மாற்றத்தை நோக்கியே நாம் பயணிக்கிறோம். எனவே கீழ்த்தரமான அரசியல் கலாசாரமும் மாற்றமடைய வேண்டும்.

வாழ்க்கையிலும், அரசியலிலும் மமதையின்றி நடப்பதனூடாகவே வெற்றியடைய முடியும்.

பெருந்தோட்டப்பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர்வீதம் காணி வழங்கும் திட்டம் 1992 காலப் பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், மலையகத்தில் உரிய அரசியல் தலைமைத்துவம் இல்லாதிருந்ததால் அத்திட்டம் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்துக்கு அமைச்சர் இராதாகிருஷ்ணனே மீண்டும் புத்துயிர் கொடுத்தார்.

இதற்காக அவருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளோம்.

இதன்பலனாகவே இன்று பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளு க்கு காணி உரிமம் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Mon, 07/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை