அறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு

உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே 'அரை மரதன்' போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில் பொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் 4வது தடவையாகவும் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின் பிரதான அனுசரனையில், இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் பூரண ஒத்துழைப்புடன், பொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச 'அரை மரதன்'– 2019 ஓட்டப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இலங்கையை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இம்மரதன் ஓட்டப்போட்டியில் உள்நாட்டு வெளிநாட்டு மரதன் ஓட்ட வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். ஆண், பெண் என சுமார் 200பேர் இம்முறை இம்மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல போட்டியாளர்கள் குறித்த போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக பிரதேச மட்டத்திலான ஓட்ட வீரர்களையும் இணைத்துக்கொள்ளும் வகையில் இம்மரதன் ஓட்டப் போட்டியானது 3 பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. 21.1கி மீ, அரை மரதன், 10கி.மீ மரதன், 5கி மீ மரதன் எனும் அடிப்படையில் இப்போட்டி இடம்பெறவுள்ளது. 5கி.மி மரதன் ஓட்டப்போட்டியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மாத்திரம் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 60வயதுக்கு மேற்பட்டவர்களும், 17வயதுக்கு கீழ்பட்டவர்களும் கலந்துகொள்ள முடியும். ஏனைய இரு பிரிவுகளிலும் 17வயதுக்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும். குறித்த மரதன் போட்டியில் கலந்துகொள்ளும் சகல வீரர்களும் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவரினால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இப்போட்டியானது அறுகம்பே அல்--அக்ஸா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பித்து பசரிச்சேனை ஊடாக சென்று சவாலை ஊடாக மீண்டும் பிரதான வீதியை அடைந்து ஊரணி, சிரியா வளைவு வரை சென்று அறுகம்பே பாலத்தில் நிறைவுபெறும். இதன்போது 5கி.மி தூரமானது அறுகம்பே பாலத்தடியில் நிறைவுபெறும், 10கி.மி குஞ்சான் ஓடை பாலத்தில் நிறைவுபெறும். அரை மரதன் 21.1கி.மி தூரமானது மீண்டும் சிரியாவில் இருந்து திரும்பி அறுகம்பே பாலத்தில் நிறைவுபெறும்.

இந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெரும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், பதக்கம் மற்றும் சான்றுதழ்களும் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் 21.1கி.மீ, அரை மரதன் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தினை பெறும் வீரருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்துடன் 15000 ரூபா பணப்பரிசும், இரண்டாமிடத்தினை பெறும் வீரருக்கு சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 10000 ரூபா பணப்பரிசும், மூன்றாமிடத்தினை பெறும் வீரருக்கு சான்றுதழ் மற்றும் பதக்கத்துடன் 5000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

21.1கி.மி, பிரதான அரை மரதன் போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கான சகலவிதமான பரிசில்களையும் வழங்குவதற்கு Paddyway Tours நிறுவனம் முன்வந்துள்ளது. இதேவேளை குறித்த போட்டியில் முதலிடத்தினை பெறும் ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு Aprota Villas அறுகம்பே நிறுவனத்தின் சுற்றுலா சொகுசு விடுதியில் ஒரு தினம் இலவசமாக தங்கிச்செல்வதற்கான வாய்ப்பினையும் அந்த நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.

அத்துடன் 10கி.மி, 5கி.மி மரதன் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தினை பெறும் வீரர்களுக்கு, சான்றுதழ்கள் மற்றும் பதக்கத்துடன் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. இம்மரதன் போட்டியில் கலந்துகொண்டு ஓட்டத்தினை பூரணமாக நிறைவு செய்யும் சகலருக்கும் சான்றிழ்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறுகம்பே 'Half Marathon' போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு (18) Aprota Villas அறுகம்பே நிறுவனத்தில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், இராணுவத்தின் 242வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் எஸ்.ரீ.ஜீ.ரனசிங்க, பிரதேச சபை உறுப்பினரும், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினருமான எம்.எச்.எம்.ஜமாஹிம், Aprota Villas நிறுவனத்தின் பணிப்பாளர் பிரசாத் வன்னியாராச்சி, அறுகம்பே சுற்றுலா விடுதிகளின் பணிப்பாளர்கள் மற்றும் ஏடிஎப்அமைப்பின் செயலாளர் எஸ்.ரீ. ஜஃபர், அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஐ.எல். இப்றாஹீம் ஆசிரியர், எம்.என்.நியாஸ் மௌலவி, எம்.எஸ்.ஏ. நாசர் உட்பட அமைப்பின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

(பாலமுனை விசேட நிருபர்)

Sat, 07/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை