இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மருந்து வகைகள் தரம் குறைந்தவை

மருந்து நிறுவனங்களின் நலன்களில் அக்கறைகொண்ட மருந்து மாபியா ஒன்று நாட்டில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்டுள்ள மருந்துகளில் அதிகமானவை தரம் குறைந்தவை என ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டினார்.

மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல விடயங்களை சுகாதார அமைச்சு மேற்கொள்வதாக, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்  வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்குமாறு கோரி எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் அதிகமானவை தரம் குறைந்தவையும் காலாவதியானவையுமாக கண்டறியப்பட்டுள்ளது. காலாவதியான மருந்துகளும் மக்களுக்கு கொடுக்கும் மருந்துகளும் ஒரே இடத்தில் இருந்து பிரிக்கப்படுவதால் மருந்துகள் கலப்படம் செய்யப்படுகின்றன.

நாட்டில் இன்று மக்களை கொல்லும் வேலையை இலங்கையின் மருத்துவத்துறை செய்து வருகின்றது. சுகாதார அமைச்சும், மருத்துவ ஆய்வுத்துறையும் இன்று மக்களின் பக்கம் சிந்திக்காது மருந்து நிறுவனங்களின் பக்கமே சிந்திக்கின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 கோடி பெறுமதியான காலாவதியான கருந்துகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றை தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு காலாவதியான மருந்துகளை கொண்டிருந்த நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை. இவற்றை பாவிக்கும் மக்களுக்கு என்ன நிலைமை என எவரும் சிந்திக்கவில்லை. மக்களுக்கு மருந்துகள் குறித்து ஒன்றுமே தெரியாது. அவர்கள் வைத்தியர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இன்று அரச மருந்தகங்களில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இல்லாதவையாகும். சுகாதார அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள 15 அரச மருந்தகங்களில் 12 மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் இல்லாதவை. இது அமைச்சருக்கு தெரியுமா? இன்று இலங்கையில் மருந்து மாபியா பரவியுள்ளது. மருந்து நிறுவனங்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு பாரிய மருத்துவ மாபியாவையே நடத்தி வருகின்றனர் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத்

 

 

Sat, 07/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை