ஹக்கீம், ரிஷாட், அமீர் அலி, மஹ்ரூப் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பு

எம்.ஏ.எம். நிலாம்

அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேற்று மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வைபவத்தின்போதே இந்தப் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பதவி துறந்திருந்த அமைச்சர்களில் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகிய மூவரும் நேற்று பதவியேற்கவில்லை.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ரிஷாட் பதியுதீன், அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ரவூப் ஹக்கீமும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டியநிலையிலேயே இவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த சத்தியப்பிரமாண வைபவம் இடம்பெற்றது. இதன்படி நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வியமைச்சராக ரவூப் ஹக்கீமும், கைத்தொழில் வர்த்தகம் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றும் அமைச்சராக ரிஷாட் பதியுதீனும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

விவசாயம், நீர் வழங்கல், கிராமியப் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக எம்.எஸ்.எஸ். அமீர்அலியும் துறை முகங்கள், கப்பல் துறை பிரதியமைச்சராக அப்துல்லா மகரூபும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் பதவியேற்பதில் தாமதமேற்பட்டுள்ளது. கல்முனை, தோப்பூர் விவகாரங்கள் தொடர்பில் சரியான இணக்கமொன்று எட்டப்படாத நிலையில் அவர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கவிரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பதில் அமைச்சராக பதவி வகித்த புத்திக்க பத்திரன இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

Tue, 07/30/2019 - 06:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை