அபாயா, ஹிஜாப் அணிவதற்கு உரிமைகோரி உச்சமன்றில் மனு

ஆசிரியை வழக்குத் தாக்கல்; செப்.04இல் விசாரிக்க அனுமதி

பாடசாலைக்கு அபாயா அல்லது ஹிஜாப் அணிந்து செல்வதற்கு பாடசாலை நிருவாகமும் அரசும் தடை விதித்துள்ளமையை இடைநிறுத்தி உத்தரவிடுமாறு பாடசாலை ஆசிரியை ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த மனு எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரு, முருது பெர்ணான்டோ, எஸ்.துரைராஜா ஆகியோர் தலைமையில் விசாரிக்கப்படவுள்ளது.

கண்டியைச் சேர்ந்த ஆசிரியையான மொஹமட் இப்ராஹிம் பாத்திமா சஹரின்(44) என்பவர், 13/2019 இலக்கம் கொண்ட பொதுநிருவாக சுற்றறிக்கை அபாய அணியும் உரிமையை மறுப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தெமுனு டி சில்வா, இந்த மனுதாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் 26.6.2019 திகதியிடப்பட்ட புதிய பொது நிருவாக சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டிருப்பதாகவும் அதில் அபாயா, ஹிஜாப் போன்றவற்றை அணிவது தடைசெய்யப்படவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த நிலவரம் மனுதாரருக்கு விளக்கப்பட்டதோடு மேலதிக விசாரணையை செப்டம்பர் 04 ஆம் திகதி நடத்துவதென நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டதைப்போன்று அபாயா, ஹிஜாப் அணிவதற்கு தற்போது தடையிருக்கின்றதா, இல்லையா? என்பதைப்பற்றி ஆராயவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13/2019 இலக்கமுடையதும் 2019 மே 29 ஆம் திகதியடையதுமான பொதுநிருவாக சுற்றறிக்கை பற்றி அறிந்திராத நிலையில் வழமைபோன்று 31 ஆம் திகதி பணிக்குச் சென்றபோது பொதுநிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் சேலை அணிந்து வருமாறு பாடசாலை அதிபர் தம்மை எச்சரித்ததாக மனுதாரரான ஆசிரியை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவர் தன்னுடைய மனுவில் பொதுநிருவாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர், ரணபிம ரோயல் கல்லூரி அதிபர், சட்ட மாஅதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

Wed, 07/10/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக