மைலோ அனுசரணையில் பாசிலோனவை நோக்கிய பயணம்

இளம் வீர, வீராங்கனைகள் 8 பேர் பங்கேற்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான பாசிலோனாவின் 2019ஆம் ஆண்டுக்கான கால்பந்து சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக வாய்ப்பினை இலங்கையின் இளம் வீர வீராங்கனைகள் 8 பேர் பெற்றுள்ளனர்.

அதன்படி பாசிலோனவை நோக்கிய பயணம் என்ற தொனிப் பொருளில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் ஸ்பெயினின் பாசிலோனா கால்பந்து பயிற்சியகத்தில் (BARCA Academy) இடம்பெறவுள்ள சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி முகாமில் குறித்த எட்டுப் பேரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கான எட்டு வீர வீராங்கனைகளையும் தெரிவு செய்யும் கால்பந்து போட்டித் தொடர், நாடு பூராகவும் 12 வயதுக்கு உட்பட்ட பாடசாலை அணிகள் இடையே நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோவின் அணுசரனையோடு நடாத்தப்பட்டிருந்தது. இதற்காக கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கமும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.

இந்த கால்பந்து போட்டித் தொடர் முதலில் மாவட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளாக இடம்பெற்றன. பின்னர், மாவட்ட மட்ட வெற்றியாளர்கள் அனைவரும் தேசிய மட்டப் போட்டிகளில் மோதினர். களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்றிருந்த தேசிய மட்டப் போட்டிகளின் நிறைவில் பார்சிலோனா செல்வதற்கான வீர வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் இறுதிக் கட்டத் தேர்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் மூலம் இலங்கையில் இருந்து பார்சிலோனா செல்வதற்காக ஆறு ஆண் வீரர்களும், இரண்டு பெண் வீராங்கனைகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும், கடந்த ஆண்டில் இந்த நிகழ்விற்கு இலங்கையில் இருந்து ஆறு வீரர்களே அனுப்பப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட வீர, வீராங்கனைகளின் விபரம்.

மொஹமட் ராஹில் – கொழும்பு ஸாஹிரா கல்லூரி

டேவிட் டார்லின்சன் – புனித ஹென்ரியரசர் கல்லூரி, யாழ்ப்பாணம்

சிதுக்க ஹன்னாதிகே – புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு

நடால் ஆரோன் – கேட்வே கல்லூரி, கொழும்பு

றிஸ்வான் ஹுமைத் – பதுரியா மத்திய கல்லூரி, மாவனெல்லை

எம்.எஸ்.எம். முமாஸ் – ஸாஹிரா கல்லூரி, கம்பளை

சசிதி நிம்சார – பெதிவெவ மத்திய கல்லூரி, பொலன்னறுவை

மல்கி லிஹாரா அதிகாரி – மலியதேவ மகளிர் கல்லூரி, குருநாகல்

தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த வீர, வீராங்கனைகள் பார்சிலோனா செல்வதன் மூலம் கால்பந்து பயிற்சிகளோடு மட்டுமல்லாது இன்னும் பல நல்ல விடயங்களையும் பெற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

பாசிலோனா கழகம் சிறந்து விளங்கும் தாழ்வுணர்ச்சி, திறமை, ஆர்வம், மதித்தல், கூட்டு முயற்சி உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் தொடர்பிலும் இலங்கையில் இருந்து பார்சிலோனா செல்லும் வீர வீராங்கனைகளுக்கு ஒரு விழிப்புணர்வு செயற்திட்டம் நடாத்தப்படவுள்ளது.

பாசிலோனவை நோக்கிய பயணம் என்ற பெயரில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சித்திட்டம் மூலம் இலங்கையின் கால்பந்து விளையாட்டை எதிர்காலத்தில் இளம் வீரர்கள் இடையில் ஊக்குவிப்பதே முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது.

Wed, 07/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை