இந்தியாவை வீழ்த்தி நியூசி. இறுதிப் போட்டிக்குத் தெரிவு

உலகக் கிண்ண கிரிக்கெட்

இந்தியாவுடனான பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் 18 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மன்செஸ்டர், ஓல்ட் டிரபர்ட் மைதானத்தில் நேற்று முன்தினம் (09) ஆரம்பமான முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்றும் தொடர்ந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.

மத்திய வரிசையில் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் (67) மற்றும் ரொஸ் டெய்லர் (74) இருவரும் நிதானமாக ஆடி அரைச்சதம் பெற்றனர்.

இந்நிலையில் பதிலெடுத்தாடக்

களமிறங்கிய இந்திய அணி 24 ஓட்டங்களுக்கே முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மத்திய வரிசை வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடி அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

குறிப்பாக எம்.எஸ் தோனி (50) மற்றும் ரவிந்திர ஜடேஜா (77) அதிரடியாக ஆடி 7ஆவது விக்கெட்டுக்கு 116 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டபோது இந்தியா வெற்றி வாய்ப்பை நெருங்கியது. எனினும் ஓட்ட வேகத்தை அதிகரிக்கும் முயற்சில் ஜடேஜா ஆட்டமிழந்த பின் இந்திய அணி சரிவை சந்தித்தது.

இதனால் அந்த அணி 49.3 ஓவர்களில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பெர்மிங்ஹாமில் இன்று (11) நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெறும் அணியுடன் லண்டனில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து பலப்பரீட்சை நடத்தும்.

Thu, 07/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை