அயகம கொழுந்து விநியோகஸ்தர்களுக்கு கொமர்ஷல் வங்கி செயலமர்வு

கொமர்ஷல் வங்கியானது, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து, அயகம பகுதியைச் சேர்ந்த கொழுந்து விநியோகிஸ்தர்கள் உள்ளடங்கிய நுண் தொழில்முனைவோருக்கான நிதியியல் கற்கைத் திட்டமொன்றை அண்மையில் நடத்தியிருந்தது.

நுண் தொழில்முனைவோருக்கான அறிவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே, இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களை கொமர்ஷல் வங்கி நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வளவாளராக, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் ரோஹித அபேகோன் பங்குபற்றினார். நிதியியல் அறிவு, வணிக அபிவிருத்தி ஆகியவற்றில் இவர் அனுபவமிக்க பேச்சாளராவார்.

கொமர்ஷல் வங்கியின் ஊவா - சப்ரகமுவ பிராந்தியத்துக்கான பிராந்திய முகாமையாளர் ஈ.பி. சூரியராச்சி, அபிவிருத்திக் கடன் திணைக்களத்தின் முகாமையாளர் மாலிக டி சில்வா, வங்கியின் கலவான கிளையின் முகாமையாளர் டி.எஸ்.எஸ். கல்பய, வங்கியைச் சேர்ந்த ஏனைய அதிகாரிகள் ஆகியோர் இதில் பங்குபற்றினர்.

சொனி நிறுவனத்தின் 'ஃபெலிக்கா" (FeliCa) என்.எப்.சி தொழில்நுட்பத்தைக் கொண்ட டெபிட் கார்ட், அடையாள அட்டை ஆகியன இணைந்த கலப்பு அட்டை மூலமும், இந்த வாடிக்கையாளர்களுக்கான ஆதரவை, கொமர்ஷல் வங்கி வழங்கிவருகிறது.

ஒவ்வொருவருக்குமெனத் தனியாக வடிவமைக்கப்பட்ட இந்த அட்டைகள், கொழுந்து விநியோகிஸ்தர்களின் கொடுப்பனவுகளைத் தானியக்கமாகக் கணிப்பதற்கு வழிவகுக்கின்றன. இந்தக் கொடுப்பனவுகள், தரவு ஈட்டல் கருவியொன்றின் மூலமாக மத்திய சேவை வழங்கியொன்றுக்கு மாற்றப்படும். அதன் பின்னர், கொமர்ஷல் வங்கியிலுள்ள சேமிப்புக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.

நுண் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை, வணிகத்துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோருக்கு, கொமர்ஷல் வங்கி நடத்தி வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக இது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இன்றுவரை 8,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் இதனால் பயன்பெற்றுள்ளனர். வங்கியின் 16 விவசாய, நுண் நிதியியல் பிரிவுகளால் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஆதரவளிக்கப்படுகின்றன.

தமது விவசாய நடவடிக்கைகளையோ அல்லது நுண் வணிகத்தையோ விருத்தி செய்வதற்கு உதவி தேவைப்படும் தொழில்முனைவோரின் விசேடமான தேவைகளை அடையாளங்காண இவை உதவுகின்றன. விவசாயக் கடன்கள், நுண் நிதி வழங்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்தப் பிரிவுகள் செயற்படுகின்றன.

கொமர்ஷல் வங்கியின் விவசாய மற்றும் நுண் நிதியியல் பிரிவுகள் இரத்தினபுரி, நரம்மல, கண்டி, அநுராதபுர, கிளிநொச்சி, பண்டாரவளை, வெல்லவாய, ஹிங்குராங்கொட, கலாவெ, அச்சுவேலி, வவுனியா, காத்தான்குடி, திஸ்ஸமஹாராமை, நெலுவ, பொத்துவில், அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

 

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை