உலகக் கிண்ணம்

கிரிக்கெட் தாயகத்திற்கு முதல்முறை

நியூசிலாந்துடனான பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து திரில் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை முதல் முறை கைப்பற்றியது.

லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் தலா 241 ஓட்டங்களை பெற்றதால் போட்டி சமநிலை ஆன நிலையில் பரபரப்பாக நடைபெற்ற சுப்பர் ஓவரிலும் கடைசி பந்து வரை தீர்மானிக்க முடியாத போட்டியாக இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டி மாறியது.

இதன்போது சுப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா 15 ஓட்டங்களை பெற்றபோதும் இங்கிலாந்து அணி அதிக பெளண்டரிகள் பெற்றதால் த்ரில் வெற்றியை சுவீகரித்தது.

இங்கிலாந்து அணியை வெற்றிவரை அழைத்துச் சென்று அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டொக்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவானார். இம்முறை உலகக் கிண்ணத்தின் தொடர் நாயகன் விருது துடுப்பாட்டம், தலைமைத்தும் என நியூசிலாந்து அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்த அந்த அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸுக்கு கிடைத்தது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நியூசிலாந்து அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்த தொடரில் தடுமாறி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்டின் குப்டில் மீண்டும் ஒருமுறை 19 ஓட்டங்களுடன் வெளியேறிதோடு தொடரில் சோபித்து வரும் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அனுபவ வீரர் ரொஸ் டெய்லரும் 15 ஓட்டங்களையே பெற்றார்.

குறிப்பாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான லியாம் பிளங்கட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் நியூசிலாந்து துடுப்பாட்ட வரிசைக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படுத்தினர்.

நியூசிலாந்து அணிக்காக அதிகூடிய ஓட்டங்களை பெற்றிருந்த ஆரம்ப வீரர் ஹனட்ரி நிகொலஸை போல்ட் செய்தார் பிளங்கட். அதேபோன்று மத்திய வரிசையில் நீஷாம்மை 19 ஓட்டங்களுடன் பிளங்கட் வெளியேற்றினார்.

மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணிக்காக 56 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்ற விக்கெட் காப்பாளர் டொம் லதம், வோக்ஸ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர்களிலும் நியூசிலாந்து அணியினரால் வேகமாக துடுப்பெடுத்தாட முடியாமல் போனது. இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவின்போது 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. பிளங்கட் தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை வி்ட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு வோக்ஸ் 9 ஓவர்களில் 37 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

குறிப்பாக நியூசிலாந்து இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 30 ஓட்டங்களை மேலதிக ஓட்டங்களாக விட்டுக்கொடுத்திருந்தது. இங்கிலாந்து 17 வைட் பந்துகளை வீசியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது ஆரம்ப விக்கெட்டுகளை குறுகிய நேரத்திற்குள் இழந்து நெருக்கடிக்கு உள்ளானது. நியூசிலாந்தின் அதிரடிப் பந்துவீச்சுக்கு முகம்கோடுக்க தடுமாறிய ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததோடு அடுத்து வந்த ஜோ ரூட் 7 ஓட்டங்களையே பெற்றார்.

நிதானமாக ஆடிவந்த ஜொன்னி பெஸ்டோ 55 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்ற நிலையில் வெளியேறினார். தொடந்து பந்தை உயர்த்தி அடித்த அணித்தலைவர் ஒயின் மோர்கன் 9 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் 5 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பென் ஸ்டொக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அபாரமா துடுப்பெடுத்தாடினர். நெருக்கடியான நேரத்தில் விக்கெட்டுகளை காத்துக்கொண்டு ஆடிய இந்த ஜோடி 110 ஓட்டங்களை பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை நெருங்கச் செய்தனர்.

இதன்போது ஓட்ட வேகத்திற்கு ஏற்ப அதரடியாக ஆடிவந்த பட்லர் பெளண்டரியை நோக்கி உயர அடித்தபோது எல்லையில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த செளதீ பிடியெடுத்தார். பட்லர் 60 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் மறுமுனையில் ஆடிய பென் ஸ்டொக்ஸ் இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை தக்கவைத்தார். போட்டியின் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டி ஏற்பட்டது. அப்போது மூன்றாவது பந்்துக்கு சிக்ஸர் ஒன்றை விளாசினார். அடுத்த பந்தில் ஸ்டொக்ஸ் இரண்டு ஓட்டங்கள் பெற முயற்சிக்க அவரின் உடலில் பட்டு பந்து பெளண்டரிக்குச் சென்றதால் இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் கிடைத்தது.

இதனால் கடைசி இரண்டு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டி ஏற்பட்டது. அந்தப் பந்தில் இரண்டாவது ஓட்டத்தை பெறும்போது ரஷீத் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி ஓவருக்கு இரண்டு ஓட்டங்களை பெறவேண்டி ஏற்பட்ட நிலையில் இரண்டாவது ஓட்டத்தை பெறும்போது வூட் ரன் அவுட் ஆக போட்டி சமநிலையானது.

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்றது. அபாரமாக ஆடிய ஸ்டொக்ஸ் 98 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை பெற்றார்.

 

சுப்பர் ஓவர்

போட்டி சமநிலை பொற்றதால் உலகக் கிண்ண இறுதிப் போட்டி சுப்பர் ஓவருக்குச் சென்றது. முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து சுப்பர் ஓவரின் 3 ஆவது மற்றும் கடைசி பந்துக்கு பெளண்டரி விளாசியதன் மூலம் 15 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய நியூசிலாந்து 2ஆவது பந்தில் சிக்ஸர் விளாசியபோதும் கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இரண்டாது ஓட்டத்தை பெற முயன்று ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றியை சுவைத்தது.

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை