சேனைப் பயிர்ச் செய்கைக்கு வன இலாகா இடையூறு; மக்கள் கவலை

ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குளுமிவாக்கட பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு வன இலாகா அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்துவதாகவும் இவற்றை உடன் நிறுத்துமாறு பிரதேச மக்கள் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

ஹொரவ்பொத்தான பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (15) பிரதேச செயலாளர் சுதர்சன திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் குழுமிவாக்கட மக்கள் சேனைப்பயிர்ச் செய்கையை வாழ்வாதார தொழிலாக செய்து வந்ததாகவும், தற்பொழுது வன இலாகா அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான காணி என கூறி செய்கை பண்ண விடுவதில்லையென மக்கள் சுட்டிக்காட்டினர்.

ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் பல ஏக்கர் காணிகளில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு மாத்திரம் அரச காணி என குறிப்பிட்டு பயமுறுத்தி வருவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

25 வருடத்திற்கும் மேலாக நாங்கள் ஒரே இடத்தில் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு வரிப் பணம் செலுத்தி வந்ததாகவும் தற்பொழுது சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தி வருவதை அரசியல் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

ஆனாலும் அண்மைக்காலமாக தங்களுக்கு அதிகளவில் இடையூறுகளை விளைவித்து வருவதாகவும் உடனடியாக சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு ஒரு நபருக்கு இரண்டு ஏக்கர் காணியை யாவது பெற்றுத்தருமாறு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தனர்.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Tue, 07/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை