சமாதான சக வாழ்வுக்கான தேசிய மாநாடு கொழும்பில்

எம்.ஏ.எம். நிலாம்

இலங்கையில் அமைதி, சமாதானம் மற்றும் சக வாழ்வுக்கான தேசிய மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்றலுடன் இடம்பெறவுள்ளது. மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் ஏற்பாட்டில் சகல மதத் தலைவர்களும் கலந்து கொள்ளும் சிறப்பு மிக்கதொரு மாநாடாக இது திகழ்கின்றது.

இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் ஜனாதிபதி, உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகமும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சங்கத் தலைவருமான கலாநிதி முஹம்மத் அப்துல் சலீம் அல் ஈஸா ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெறவுள்ளன. இன, மத, மொழி, பேதம் கடந்த சமாதான சகவாழ்வு மாநாடாக நடைபெறும் இந்த மாநாட்டில் உள்நாட்டையும், வெளிநாடுகளையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நான்கு நிக்காயாக்களினதும் மகாநாயக்க தேரர்கள், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்கள், புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர்கள் பங்கேற்றலுடன் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த தேசிய மாநாட்டின் பிரதானமான நோக்கங்களாக பின் வருபவை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் சமயம் மற்றும் இனங்களுக்கிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தல்.

இலங்கையில் வாழும் பல்வேறு மதங்களை சார்ந்தவர்கள் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் சகவாழ்வோடும் வாழக்கூடிய செய்தியை உலகளாவிய மட்டத்துக்கு எடுத்துச் செல்லல்.

இலங்கையில் அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் சகல விதமான அடிப்படைவாதங்களையும் நிராகரிக்கும் செய்தியை உலக மக்களுக்கு எடுத்துக்கூறுதல்.

இலங்கையின் சகல சமூகங்களும் தாய் நாட்டின் கலாசாரம், சம்பிரதாயம், பாரம்பரியங்களை மதித்து அவற்றினை பாதுகாத்துக் கொண்டு வாழ்வதற்கு ஊக்கமளித்தல்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்தோடு வாழும் அமைதி மிக்க நாடு என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மக்களதும் வாழ்வை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல்.

பெரும்பான்மை சமூகத்தின் குறிப்பாக பௌத்த மக்களின் மத உணர்வுகளைத் துண்டாமல் அவர்களது மத அனுஷ்டானங்களையும் பாரம்பரியங்களையும் மதித்து அன்னியோன்யமாக நடத்து கொள்ளல்.

Tue, 07/30/2019 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை