'பெற்றி கம்பஸை' அரசு பொறுப்பேற்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்

ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டம்

* ஷரிஆ பல்கலை என பொய் பிரசாரம்

* அரசுடன் 50இற்கு 50 இணக்கத்திற்குத் தயார்

'பெற்றி. கம்பஸை' எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க மாட்டோம். அவசர கால சட்டத்தின் கீழோ வேறு சட்டத்தின் கீழோ இதனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கவும் முடியாது என 'பெற்றி. கம்பஸ்' ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் ஆளுநருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். அரசாங்கம் இதனைப் பொறுப்பேற்க இடமளிக்கப் போவதில்லை என்று கூறிய அவர், மக்களுக்கும் அரசுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இணைந்து மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெற்றிகலோ கம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு நேற்று கொழும்பு குவீன்ஸ் கெபே ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

பெற்றிகலோ கம்பஸை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனப் பாராளுமன்ற மேற்பார்வை குழு பரிந்துரை வழங்கியுள்ளது. இது தவிர மேற்படி குழுவின் தலைவர் இது தொடர்பில் தனிநபர் பிரேரணை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகம் குறித்து விசாரணை நடத்துமாறும் பாராளுமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அசூ மாரசிங்கவின் தனிப்பட்ட நிலைப்பாட்டின் பிரகாரமே பெட்டிகலோ பல்கலைக்கழகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பெற்றிகலோ பல்கலைக்கழகம் தொடர்பில் முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நாம் நிராகரிக்கிறோம்.

பல்கலைக்கழகத்திற்காக சட்டவிரோதமாக காணி பெறப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள அமைப்பினூடாகவே இதற்குப் பணம் கிடைத்ததாகவும் கூட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் தான் நாம் மகாவலி அதிகார சபையிடம் காணி கோரியிருந்தோம். 2016 இல் வருடாந்த அனுமதி கிடைத்தது. அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்ட நிலையில், 2018 இல் காணி தொடர்பான உறுதி கிடைத்தது. பல் ​வேறு நாடுகளில் செயற்பட்டு வரும் சேக் அலி அப்துல்லா அல் ஜுபாலி நிறுவனத்தினூடாக எமக்கு இலகு கடனுதவி கிடைத்தது.பணம் வந்தது தொடர்பிலும் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், மத்திய வங்கியினூடாக சகல அனுமதிகளுடனே பணம் அனுப்பப்பட்டது. கட்டடம் நிர்மாணிக்க கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களையும் அசூ மாரசிங்க போலியானது என்று கூறுகிறார்.

எனக்கு 1750 கோடி ரூபா கிடைத்துள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஆனால், எமக்கு 360 கோடி ரூபா தான் கி​டைத்தது.இதனைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்களில் பின்னரே செலுத்த ஆரம்பிக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட நிறுவனத்தினூடாக பணம் கிடைத்திருந்தால் மத்திய வங்கி அதற்கு அனுமதித்திருக்குமா?

சரீஆ பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும் எவரும் அதற்கு ஆதாரம் முன்வைக்கவில்லை.கட்டட வடிவமைப்பையும் பேரீச்சம் பழ மரங்களையும் வைத்து இது சரீஆ பல்கலைக்கழகம் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.எமக்குத் தேவையான பாடங்களை இங்கு கற்பிக்க முடியாது.இங்கு கற்பிக்கும் பாடங்கள் குறித்து உயர்கல்வி அமைச்சிற்கு பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவர்கள் நிபுணத்துவ குழுவொன்றை நியமித்து ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்குவார்கள்.

கட்டடப் பொறியிலாளர் பட்டம் பெற 24 இலட்சம் ரூபா செலவிட வேண்டும். ஆனால், நாம் 12 இலட்சமே பெற இருப்பதோடு அதிலும் 8 இலட்சம் வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்படும் நிலையில் இதனை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுத்த நாம் தயாராக இருக்கிறோம்.இதன் முகாமைத்துவத்தை 50 இற்கு 50 என்ற அடிப்படையில் மேற்கொள்ளவும் அரசாங்கத்துடன் எத்தகைய உடன்பாட்டுடன் செயற்படவும் நாம் தயாராக இருக்கிறோம். மாணவர் தெரிவு முதல் முக்கிய விடயங்களை அரசிற்கு வழங்கவும் நாம் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

 

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை