பிரிட்டன் எண்ணெய் கப்பலுக்கு ஈரானிய படகுகள் இடையூறு

பிரிட்டனின் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

வளைகுடாவுக்கு அருகில் ஈரானிய படகுகள் பிரிட்டனின் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இடையுறு மேற்கொண்ட நிலையில் பிரிட்டன் கடற்படை படகு ஒன்று அந்த படகுகளை துரத்தியதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவத்தில் மூன்று ஈரானி படகுகள் எண்ணெய் கப்பலுக்கு இடையூறு செய்ய முயன்ற நிலையில் பிரிட்டன் கடற்படை படகில் இருந்து வாய்மொழி மூலமாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்தே அவை விலகிச் சென்றதாக பிரிட்டன் அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“இந்த செயற்பாடு குறித்து நாம் கவலை அடைவதோடு பிராந்தியத்தின் நிலைமையை தணிக்கும்படி ஈரான் நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்” என்று அது குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சர் முஹமது சாரிப் மறுத்துள்ளார். “பிரிட்டன் கப்பல் வேண்டும் என்று கடந்து சென்றது. அவர்கள் தானாக இதனை கூறுகிறார்கள். இந்த கூற்று மூலம் பதற்றத்தை உருவாக்குகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பெறுமதியும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயலில் ஈடுபடவில்லை என்று ஈரானிய புரட்சிக் காவல் படையும் நிராகரித்துள்ளது.

ஈரானிய புரட்சிப்படையுடன் தொடர்புடையது என்று சந்தேகிக்கப்படும் ஐந்து படகுகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டனர்.

“அவர்கள் சுற்றிவளைத்த நிலையில் அங்கிருந்த ரோயல் நேவி எச்.எம்.எஸ் மொன்ட்ரோஸ், படகுகளை நோக்கி துப்பாக்கியை நீட்டி, ரேடியோ ஊடாக எச்சரித்தது” என்று சம்பவம் பற்றித்து தெரிந்த ஓர் அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் ஹெரிட்டேஜ் என்ற எண்ணெய்கப்பல் பாரசீக வளைகுடாவிலிருந்து ஹார்முஸ் நீரிணைக்கு செல்ல முயன்றவேளை ஈரானிய படகுகள் அந்த கப்பலை நோக்கி சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகிலிருந்தவர்கள் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை பாதை மாறி பயணிக்குமாறும் ஈரானின் கடல்பகுதிக்கு செல்லுமாறும் உத்தரவிட்டனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இராணுவம் இந்த சம்பத்தை உறுதி செய்திருந்தபோதும் அந்தச் சம்பவம் குறித்து மேலதிகமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஜிப்ரால்டர் கடற்பகுதியில் வைத்து கடந்த வாரம் ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றை கைப்பற்றியது குறித்து பிரிட்டன் மீது ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி இரண்டு மில்லியன் பீப்பாய்களுடன் இந்த எண்ணெய் கப்பல் சிரியாவை நோக்கிச் செல்வதாக பிரிட்டன் குற்றம்சாட்டுகிறது.

எனினும் இந்த கப்பல் சிரியாவுக்கு செல்லவில்லை எனக் கூறும் ஈரான், இது ஒரு கடற்கொள்ளை என்று குற்றம்சாட்டுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானுக்கான பிரிட்டன் தூதுவருக்கும் ஈரான் அழைப்பு விடுத்தது.

2015 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகி, ஈரான் மீது மீண்டும் தடைகளைக் கொண்டுவந்த நிலையில் அமெரிக்க கூட்டணி மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த தடைகளுக்கு பதில் நடவடிக்கையாக 2015 உடன்படிக்கையில் கொண்டுவரப்பட்ட அணு சக்தி தொடர்பான கட்டுப்பாடுகளை ஈரான் மீறி வருகிறது.

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை