அமெரிக்க உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு: மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்ற உணவுத் திருவிழா ஒன்றில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல் இடம்பெற்று சற்று நேரத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுள்ளார். இதில் இரண்டாவது சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி இருக்கும் சந்தேகத்தில் பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளோரோய் கார்லிக் திருவிழா ஞாயிறு மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் முடிவுக்கு வந்துள்ளது. தனது 30 வயதுகளின் ஆரம்பத்தில் இருக்கு வெள்ளையின ஆடவர் ஒருவர் சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்த ஜீலிசா கொண்டரஸ் என்.பி.சி. தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்த ஆண்டில் இடம்பெறும் 246 ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது இருப்பதாக துப்பாக்கி வன்முறை தொடர்பிலான கண்காணிப்பு இணைதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

எல்லை வேலியை வெட்டி திருவிழாவுக்குள் ஊடுருவி இருக்கும் துப்பாக்கிதாரி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் இரண்டாவது நபர் ஒருவரும் தொடர்புட்டிருப்பதாக சம்பவத்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த தளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு ஆரம்பித்து ஒரு நிமிடத்திற்குள் பதிலுக்கு சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், உணவு திருவிழாவில் பங்கேற்றவர்கள் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு குழப்பத்தில் சிதறி ஓடுவது தெளிவாக பதிவாகியுள்ளது. சமுதாயத்திற்கு நல்லது செய்யும் ஒரு நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்தது மிகவும் வருத்தத்திற்குரியது என்று கில்ராய் நகரின் பொலிஸ் தலைவர் ஸ்மித்தி தெரிவித்தார்.

சந்தேக நபரின் உயிரிழப்புக்கு முன்னதாக, சம்பவத்தில் இருக்கும் அனைவரும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Tue, 07/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை