மனச்சாட்சிக்கு விரோதமாகவே எதிர்த்து வாக்களிக்கிறேன்

என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் விலகுவேன்

எனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்துவிடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள் என எதிரணியை கோருவதாக முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.ஏப்ரல் 21 தாக்குதலுக்கு தான் உட்பட ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறிய அவர், மனச்சாட்சிக்கு விரோதமாகவே நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாகவும் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைமீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,எனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்துவிடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள். ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் அடங்கியுள்ள விடயங்கள் உண்மையானவை.

இதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறே எனது மனம் கூறுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் எம்மீதும் எமது மக்கள் மீதும் பல குற்றச்சாட்டுகள்முன்வைக்கப்பட்டன.எனக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டது.எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையிடுமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.

இதற்கு காலக் கெடுவும் வழங்கப்பட்டது. என் மீது குற்றச்சாட்டு முன்வைத்த எத்தனை பேர் பொலிஸில் முறையிட்டார்கள்.அவர்களுக்கு எனக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திருக்கலாம்.ஆனால் எனக்கு எதிரான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தவறு என பொலிஸ் மா அதிபர் அறிவித்திருந்தார். எனக்கு எதிரான 10 குற்றச்சாட்டுகளையும் நிரூபித்தால் எனது அரசியல் வாழ்விலிருந்து விடைபெற தயாராக இருக்கிறேன். அரசியலுக்காக 21 தாக்குதலை பயன்படுத்தாதீர்கள்.

ஸஹ்ரானுடன் தொடர்புள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.21 தாக்குதல் தொடர்பில் நான் உட்பட ஜனாதிபதி,பிரதமர் என அனைவருக்கும் இறைவனிடம் பதில் கூற வேண்டியிருக்கும்.ஸஹ்ரான் பற்றிய சகல தகவல்களையும் வழங்கியும் அதனை தடுக்க வக்கில்லாதவர்களாக இருக்கிறோம்.ஆனால் இதனை எம் மீதும் எமது சமூகத்தின் மீதும் திணிக்க முயற்சிக்கிறார்கள்.

இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. ஐ.எஸ் அமைப்பு முஸ்லிம் நாடுகளை அழிக்க உருவாக்கப்பட்டதாகும். காடையர்கள் குழு முஸ்லிங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.

அண்மையில் பாடசாலைக்குள் செல்ல முற்பட்ட தந்தையொருவர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் குருணாகலில் 300-_ 400 காடையர்கள் 30 கடைகளை எரித்தும் 900 வீடுகளை உடைத்தும் 29 பள்ளிகளை தாக்கியும் ஒருவரை கொலை செய்தும் நாசம் செய்த போது இராணுவமும் பொலிஸும் எதுவும் செய்யவில்லை.அவர்களின் துப்பாக்கிகள் வெடிக்கவில்லை. 300 மேற்பட்டவர்கள் கைதான போதும் ஒருவாரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

அரசியலுக்காக இவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இறைவன் உரிய தண்டனை கொடுப்பான். எனக்கு சு.கவுடனோ ஐ.தே.கவுடனோ இணைந்து போட்டியிடால் அதிக எம்.பிகளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முடியும்.வாக்கிற்காக ரதன தேரர் இனவாதத்தை கக்கி வருகிறார்.கல்முனை ,யாழ்ப்பாணம் என பல இடங்களுக்கு சென்று இனவாதம் பேசுகிறார்.ஆனால் அவர் சொல்வதை நம்புமளவு தமிழ் சமூகம் மடத்தனமானவர்களல்ல.எமக்கிடையிலான பிரச்சினைகளை பேசித்தீர்க்கமுடியும்.

எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்ட போது சம்பந்தன் ஐயாவை சந்தித்தேன். உங்கள் சமூகம் கஷ்டத்தில் இருக்கிறது.22 இலட்சம் முஸ்லிங்களோ முஸ்லிம் எம்.பிகளோ பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களல்லர் என்று அவர் கூறினார்.உன் குரலை நசுக்கப் பார்க்கிறார்கள்.உனது பாதுகாப்பு குறித்து கவனமாக இரு.உன்னை விழ விட மாட்டேன் என்று தைரியப்படுத்தினார்.அவருக்கும் எனக்கும் அரசியல் ரீதியான கருத்து ​வேறுபாடு இருக்கிறது. ஆனால் என்மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் எனக்கு சார்பாக இருந்தார்.

எனக்கு பல ஏக்கர் காணி இருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு கோருகிறேன்.முஸ்லிம்களின் கடைகளில் வாங்க வேண்டாம் என பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.டொக்டர் சாபி விடயத்தில் தான் விரும்பும் தீர்ப்பு கிடைக்க வேண்டும் என ஒரு தேரர் விரும்புகிறார்.அவரின் மடமையையே இது காட்டுகிறது.

வகாபிசத்திற்கு எதிராக அரசியல் வங்குரோத்து அடைந்த ஒரு தலைவர் போராட்டம் நடத்தி வருகிறார்.அவர் கூறும் மாவட்டத்தில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். அவர் தனது கட்சியில் போட்டியிட முன்வருவாரா என சவால் விடுகிறேன்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

Fri, 07/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை