“உங்கள் பகைவரிடம் அன்பு செலுத்துங்கள் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”

செபத்தின் வல்லமையை விளக்கும் லூக்கா நற்செய்தி

மனிதனுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குவது சமூக வாழ்க்கை.  இதனால் பிறரோடு பழகுதல், உரையாடுதல், தருதல், பெறுதல் என்பது மனித சமூக வாழ்வின் மிக அவசியமான செயற்பாடுகள்.

இத்தகைய செயற்பாடுகள் இல்லாத மானிட வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் மானிட சமூக உறவுக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு உண்டு. அதுதான் கடவுள் - மனித உறவு.

கடவுளை ஏற்றுக் கொள்ளுதல், அவரை நம்புதல், அவரைப் போற்றிப் புகழ்தல், அவரிடம் வேண்டுதல் செய்தல் போன்றவை கடவுள்  மனித உறவின் கூறுகளாக உள்ளன. விவிலிய வாசகங்கள் இறை மனித உறவின் ஓர் இன்றியமையாத கூறு பண்பு என்று தெளிவாக்குகிறது. செபத்தைப் பற்றிய தெளிவான சில சிந்தனைகளையும்  தருகிறது.

இந்த உலகில் மக்கள் சிலர் எவ்வாறு செபத்தை நோக்குகிறார்கள் என்று பார்த்தால்:  சமூகத்தில் மற்றும் பொருளாதார விடயங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குக் கடவுள் ஏதாவது புதுமை செய்து குறுக்கு வழிகாட்டமாட்டாரா என்று பிரச்சனையைத் தீர்க்கும் ஆயுதமாகச் சிலர் செபத்தைச் கருதுகிறார்கள்.

தனியாகவோ  அல்லது குழுவாகவோ அமர்ந்து கைகளைத் தட்டி சத்தமாகப் பாடி செபித்தால் தன் மனப்பாரம் குறையும். உடல் வலியும் மாறும் என்று செபத்தை ஒரு மருந்தாகக் கருதி அணுகுபவர்கள் உண்டு.  ஆண்டவரே நான் இத்தனை முறை உம்மிடம் வந்துள்ளேன். இத்தனை தடவை தவறாமல் நவநாட்களில் கலந்துகொண்டுள்ளேன். எனவே நான் விரும்புவதை எனக்குக் கட்டாயம் தரவேண்டும் என்று கடவுளை மடக்குவது, செபத்தைக் கையூட்டாக, பேரம் பேசி லஞ்சம் கொடுப்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள்.

சிலர் கடவுளை ஒரு கடுமையான நீதிபதியாகவும் காவல் துறை அதிகாரியாகக் கருதி தண்டனையிலிருந்து தப்பிக்க காணிக்கை, பாதயாத்திரை,நேர்த்திக்கடன் என்றெல்லாம் கடவுளின் கோபத்தைத் தணிப்பதாகச் செபத்தோடு இணைத்துச் செய்கிறார்கள்.

ஆனால் கடந்த நற்செய்தி வாசகங்கள் உண்மையான செபம் என்ன எத்தகைய மனநிலையோடு செபிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆபிரகாம் இறைவனோடு பேசுவது ஒரு நண்பனோடு பேசுவதுபோல் உறவின் வெளிப்பாடாக அமைகிறது. நல்லவர்கள் சிலர் இருந்தால் அதற்காக அந்த நகரையே, ஊரையே அழிக்கவேண்டாம் என்று கடவுளிடம் உரிமையோடு அவர் மன்றாடுகின்றார்.

செபம் என்பது கடவுளுக்கும் நமக்கும் இடையே நடக்கும் ஒரு உறவின் உரையாடல். செபம் என்பது மனித உள்ளத்தை இறைவன்பால் உயர்த்துவது. மனித உள்ளம் இறைவனோடு இரண்டறக் கலப்பது. கடவுளோடு கொண்டிருக்கும் நெருக்கமான உறவின் வெளிப்பாடுதான் செபம்.

இதைத்தான் ஆபிரகாம் ஆண்டவரோடு வாதாடவும் கடவுள் கருணை, இரக்கம் உள்ளவர் என்பதையும்  நீதி நிறைந்தவர் என்பதையும் நறசெய்தி வாசகம் காட்டுகிறது.

கடந்த ஞாயிறு நற்செய்தியில் (லூக். 11:1 - 2) திருமுழுக்கு யோவான் தன் சீடர்களுக்குக் கற்றுத் தந்ததுபோல எங்களுக்கும் கற்றுத் தாரும் என்று இயேசுவின் சீடர்கள் கேட்டார்கள். ஏனெனில் இயேசு தன் தந்தையோடு உறவாடுவதையும் அதனால் அவர் அனுபவிக்கும் நெருக்கமான உறவையும் அவர்களால் உணர முடிந்தது.

அந்த நேரத்தில்தான் இயேசு ஒரு சிறப்பான செபத்தை வடிவமைத்துக் கொடுத்தார். இதில் செபம் இறைநோக்கும் அதே சமயத்தில் மனித நோக்கும் கொண்டதாக இருக்க வேண்டும் எனக் காட்டுகிறார். செபத்தில் புகழ்தல், நன்றி கூறல், ஆராதித்தல், மன்றாடுதல் தேவை. இதை உள்ளடக்கிக் கடவுளைப் போற்றிப் புகழவும் மானிடத் தேவைகளை உள்ளடக்கியும் அழகான செபத்தை நமக்கு இயேசு கற்றுத் தந்துள்ளார். இதை வாயால் மட்டும் செபிப்பதல்ல. மாறாக வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

நான் செபிக்கும்போது நான் கேட்டது கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர். இதனால் இனி நான் ஆலயம் போவதில்லை என்பவர்கள் ஏராளம்.

நம்மிடம் உள்ள தடைகள் என்ன?  பாவத்தோடு இருக்கிறோமா? ஒரு தாய் அலுவலக வேலை முடித்து வீடு திரும்பும்போது தன் குழந்தைக்குத் தின்பண்டம் வாங்கி வருகிறாள். தாயைக் கண்ட மகன் ஓடோடி வந்து தாயின் கையில் உள்ள தின்பண்டத்தைப் பறிக்கப் பார்க்கிறான். தாய் கொடுக்க மறுக்கிறாள், மகனே! வீட்டுக்கு வா. வீதியில் விளையாடி உன் கையெல்லாம் ஒரே தூசு. முதலில் கையைக் கழுவு. அதன்பின் இந்த தின்பண்டத்தைத் தருவேன் என்கிறாள் அந்த அன்புத் தாய்.

ஆம்! நாம் பாவத்தோடு எதையும் இறைவனிடம் பெற முடியாது. நமது குற்றங்களுக்காக முதலில் இறைவனிடம் மன்னிப்புப் பெற வேண்டும் (கொலோ. 2:13).

புனித பேதுரு (1பேதுரு 1:15) கூறுவதுபோல உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மை உள்ளவராக இருங்கள்.

உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராக இருங்கள் என்கிறார் இயேசு (மத். 6:48) தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் (மத். 5:8) நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள். கேட்டாலும் அடைவதில்லை (யாக். 4:3)

பிறரை மன்னிக்கும் உள்ளம் கொண்ட வர்களாய் இருந்தால்தான் செபிக்க முடியும். செபிப்பதையும் பெற முடியும்,  நீங்கள் உங்கள் பகைவரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (லூக். 6:35)

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராக இருங்கள் (லூக், 6:36)

எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் உங்களுக்கும் அளக்கப்படும் (லூக், 6:38)

அப்பா பிதாவே! இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாது செய்கிறார்கள் (லூக். 23:34)

நாமும் கர்த்தர் கற்பித்த செபத்தில் சொல்லுகிறோம். நாங்கள் பிறரை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னித்தருளும் (லூக். 11:4)

காணிக்கைச் செலுத்த வரும்போது மனத்தாங்கல் இருந்தால் முதலில் சமாதானம் செய் (மத். 5:23-24)

மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் வானகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் (மத், 6:15)

நாம் பரிசுத்த உள்ளத்தோடு கேட்கலாம். சில நேரத்தில் கேட்டும் பெறாமல் இருக்கலாம். ஏனெனில் அது நமக்குத் தேவையா என்பதை அறியாமல் இருப்போம். இறைவன் நமக்குத் தேவை இல்லையென்றால் அதைத் தராமல் இருக்கலாம்,

உலகத் தந்தையர்கள் தம் பிள்ளைகளின் தேவைகளை அறிந்திருக்கிறார்கள் என்றால் நம் வானகத் தந்தை நம் தேவைகளை நன்றாக முழுமையாக அறிந்திருக்கிறார். செபத்தின் முக்கியம்.  இயேசு வேண்டுவதற்காக, ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12) * சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத்,26:41)

இடைவிடாது செபியுங்கள் (1தெச. 5:17)  செபமற்ற வாழ்வு செத்த வாழ்வு,  குடும்ப செபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு,  நம் செபம் அறிவு பூர்வமாக மட்டும் இருக்கக் கூடாது; மாறாக உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும்

அன்னை தெரெசாவிடம் இத்தனை ஆயிரம் பேரை வைத்து எவ்வாறு பராமரிக்க முடிந்தது என்று கேட்டபோது  நற்கருணை நாதருக்காக நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் செலவிடுகிறோம். அவர் எங்களை வழிநடத்துகிறார் என்றார்.            -

அருட்பணி
முனைவர் ம. அருள்

 

 
Tue, 07/30/2019 - 08:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை