அரையிறுதிக்கு தெரிவானது இந்தியா

உலக கிண்ண கிரிக்கெட்:

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் இந்திய அணி, பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

பர்மிங்ஹம் நகரில் (02ம் திகதி ) நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து கொண்டார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஒரு தோல்வியை மாத்திரம் சந்தித்த இந்திய அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை வசதியான முறையில் உறுதி செய்து கொள்ள இப்போட்டியில் வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது.

இப்போட்டிக்காக இந்திய அணி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அதன்படி, புவனேஸ்வர் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கேதர் ஜாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக இந்திய அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் தற்போது 7 புள்ளிகளுடன் காணப்படும் பங்களாதேஷ் அணிக்கு, இன்னும் ஒரு போட்டி மாத்திரமே தமக்கு எஞ்சியிருப்பதால் தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது.

பங்களாதேஷ் அணியிலும் இப்போட்டிக்காக இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி, சப்பீர் ரஹ்மான் மற்றும் ருபெல் ஹொசைன் ஆகியோர் மெஹிதி ஹஸன் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோருக்கு பதிலாக பங்களாதேஷ் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து நாணயச் சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இந்திய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியான ரோஹித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் மிகச் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.

இரண்டு வீரர்களும் இந்திய அணியின் முதல் விக்கெட்டுக்காக 180 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, இந்திய அணியின் முதல் விக்கெட்டாக இந்த உலகக் கிண்ணத் தொடரில் நான்காவது முறையாக சதம் பெற்ற ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.

செளம்யா சர்க்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா 92 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பெளண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், இது ரோஹித் சர்மாவின் 26ஆவது ஒருநாள் சதமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இந்திய அணிக்கு அதன் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராகுல், அவரின் நான்காவது ஒருநாள் அரைச்சதத்துடன் வலுச்சேர்த்தார். தொடர்ந்து ருபெல் ஹொசைனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த லோகேஷ் ராகுல் 92 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்திய அணியில் துடுப்பாடிய விராட் கோஹ்லி (26), ஹர்திக் பாண்ட்யா (0) ஆகியோர் தடுமாற்றம் காண்பித்த போதிலும் றிஷாப் பான்ட் மற்றும் மஹேந்திர சிங் டோனி ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு, இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் றிஷாப் பான்ட் 41 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களை குவித்திருந்தார். இதேநேரம் டோனி, 33 பந்துகளில் 35 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 59 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். அத்தோடு, இப்போட்டி மூலம் முஸ்தபிசுர் ரஹ்மான் ஒருநாள் போட்டிகளில் 4ஆவது தடவையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 315 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 286 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் சகீப் அல் - ஹஸன், இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற நான்காவது அரைச்சதத்துடன் 74 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றிருந்தார். இது சகீப் அல்- ஹஸனுக்கு 45ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் இருந்தது. அதேவேளை, மொஹமட் சயீபுத்தின் ஒருநாள் போட்டிகளில் தான் பெற்றுக் கொண்ட இரண்டாவது அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் இருந்து 38 பந்துகளில் 51 ஓட்டங்கள் குவித்து தனது தரப்பிற்காக போராட்டத்தை காண்பித்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் ஜஸ்பிரிட் பும்ராஹ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும் தமது தரப்பின் வெற்றியை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவானார்.

இப்போட்டியில் கிடைத்த தோல்வியினால் பங்களாதேஷ் அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழக்கின்றது. அதேவேளை இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இந்திய அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் இரண்டாவது அணியாக மாறுகின்றது.

அடுத்ததாக இந்திய அணி, தமது கடைசி உலகக் கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (6) ஹெடிங்லி மைதானத்தில் எதிர்கொள்கின்றது.

மறுமுனையில் பங்களாதேஷ் அணி, தமது கடைசி உலகக் கிண்ண மோதலில் பாகிஸ்தான் அணியை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நாளை வெள்ளிக்கிழமை (5) சந்திக்கின்றது.

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை