சம்பந்தன் தலைமையில் தமிழர்களுக்கு தீர்வு சாத்தியமில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ், தமிழர்களுக்குத் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தில் நோர்வே சுன்மோர வாழ் மக்களின் நிதி உதவியுடன் நேற்று(03) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டி வரும் என சம்பந்தன் தெரிவித்துள்ள கூற்று, தமிழ் மக்களுக்கு

பாதிப்பையே ஏற்படுத்தும். நாங்கள் ஆயுதம் ஏந்தக் கூடிய நிலையில் இல்லை. மூன்று மாதங்களுக்கு தீர்வுகள் கிடைக்கா விடின் ஆயுதம் ஏந்துவோம் எனக் கூறுவதில் எவ்விதமான பின்னணியும் இல்லை.வெறும் பேச்சுக்காக பேசும் கருத்தப்போலவே இது தெரிகிறது.

முப்பது வருடங்களாக ஆயுதம் ஏந்தியதன் தாக்கம் இப்போதும் எங்களிடம் இருக்கிறது. எனவே, இவ்வாறான பேச்சுக்களைத் தவிர்ப்பது சிறந்தது.

தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும் எனத் தெரிவித்திருக்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் 2016 இல் இவ்வருட இறுதிக்குள் தீர்வு என்று கூறினார். அவ்வாறே 2017 இலும் 2018 இலும் கூறினார். இப்பொழுது எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றார். ஆனால், நாங்கள் இதை அப்பொழுதிருந்தே கூறி வந்தோம். அரசு எப்பொழுதும் மனமுவந்து தீர்வை வழங்காது. அரசுக்கு நெருக்கடிகளை, அழுத்தங்களைக் கொடுத்தே தீர்வுகளைப் பெறவேண்டும். அரசுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தீர்வைப் பெறலாமென நம்புவது சிறுபிள்ளைத் தனமானது.

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ் மக்களுக்கு தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் எதுவும் தென்படவில்லை. சம்பந்தன் நூறு வயது வரை இருந்தால் சில வேளை அவரது காலத்திற்குள் தீர்வு கிடைக்க கூடும்.சில வேளைகளில் தேர்தல் காலங்களில் அரசியல் நோக்குடன் பிரதமர் ரணில் ஏதேனும் தீர்வுகளைத் தரலாம் எனக் கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. அது நடக்குமா? என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை