ஜெரூசலம் புறநகரில் பலஸ்தீன வீடுகளை இடிக்கும் இஸ்ரேல் நடவடிக்கை ஆரம்பம்

பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டம் மற்றும் சர்வதேசத்தின் கண்டனத்திற்கு மத்தியில் ஜெரூசலத்தின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தடுப்பு ஒன்றுக்கு அருகில் இருக்கும் கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கையை இஸ்ரேலிய இராணுவம் ஆரம்பித்துள்ளது.

1967 மத்திய கிழக்கு யுத்தத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெரூசலத்தின் விளிம்பில் இருக்கும் சுர் பஹர், பலஸ்தீன கிராமம் ஒன்றை நோக்கி புல்டோசர்களுடன் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தடுப்பை ஒட்டி இருக்கும் ஏனைய பலஸ்தீன நகரங்கள் போன்று தமது வீடுகள் மற்றும் கட்டடங்களும் தகர்க்கப்படும் என்று பலஸ்தீனர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த தடுப்பு வேலி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை ஊடாக பல நூறு கிலோமீற்றர்கள் தூரம் நீண்டு செல்கிறது.

இந்த கட்டடத் தகர்ப்புகள் ஜெரூசலத்தின் எதிர்காலம் தொடர்பிலான விவாதங்களை மேலும் சிக்கலாக்குவதாக உள்ளது. யூதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் புனிதத் தலங்கள் உள்ள இங்கு 500,000 இற்கும் அதிகமான இஸ்ரேலியர் மற்றும் 300,000 பலஸ்தீனர்கள் வசிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை சூரியன் எழுவதற்கு முன்னர் இஸ்ரேலிய படை சுர் பஹர் பிரதேசத்தை ஒட்டி இருக்கும் கம்பி வேலையை நீக்கி அந்தப் பகுதியை நோக்கி முன்னெறியதோடு, அங்குள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றியது.

பின்னர் ஹெல்மட் அணிந்த இஸ்ரேலிய துருப்புகள் அங்கு குவிக்கப்பட்டன.

தொடர்ந்து சூரியன் உதித்த விரைவில் கனரக இயந்திரங்கள் கொண்டு இரண்டு மாடி வீடு ஒன்று இடிக்கப்பட்டது. அருகில் இருக்கும் பகுதி அளவு கட்டப்பட்ட கட்டடமும் இடிக்கப்பட்டது.

இதன்போது ஒருவர், “இங்கேயே நான் உயிரிழக்க விரும்புகிறேன்” என்று கூச்சலிட்டார். இந்த கட்டடங்களில் ஒன்றில் வசித்து வந்த இஸ்மைல் அபதியா, தாம் வீடற்றவர்களாக மாறிவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். “நாம் இப்போது வீதிக்கு வந்துவிட்டோம்” என்று அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

“அதிகாலை 2 மணி தொடக்கம் அவர்கள் வீடுகளில் இருந்து மக்களை வெளியேற்றியதோடு அந்த வீடுகளை இடிப்பதற்கு அங்கு வெடி பொருட்களை வைக்க ஆரம்பித்தார்கள்” என்று சுர் பஹர் கிராமத்தின் சமூகத் தலைவர் ஒருவரான ஹமதா என்பவர் குறிப்பிட்டார்.

கட்டிடங்களை இடிப்பதை தடுக்கும் முயற்சியில் பலஸ்தீன, இஸ்ரேலிய மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டதோடு இந்த செயற்பாடுகளை வீடியோ மற்றும் புகைப்படங்களில் பதிவு செய்தனர்.

தடையை மீறி இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் தமது சொந்த வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு விடுக்கப்பட்ட இறுதிக் காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.

இதனால் சுர் பஹர் கிராமத்தின் சில மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இங்கு தமது கட்டடங்களை கட்டுவதற்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரத்தை பெற்றிருக்கும் பலஸ்தீன அதிகார சபையின் அனுமதியை பெற்றதாக உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இஸ்ரேலிய நிர்வாகத்திடம் கட்டடம் கட்டுவதற்கு பலஸ்தீனர்கள் அனுமதி பெறுவது மிகக் கடினமாகும். இதனால் பலஸ்தீனர்களிடையே வீட்டு பற்றாக்குறை இருந்து வருகிறது.

பரந்திருக்கும் சுர் பஹர் கிராமமான கிழக்கு ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரைக்கு இடையில் உள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் நகர சபை எல்லைக்கு வெளியில் இந்த கிராமத்தின் ஒரு பகுதி அமைந்திருப்பது பூகோள ரீதியான நெருக்கடிக்கு உள்ளானபோதும், தடுப்பு வேலி இந்த கிராமத்தை மேற்குக் கரையில் இருந்து பிரிப்பதாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது.

எனினும் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலேயே இந்த கிராமம் இருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் தடுப்பு வேலிக்கு அருகில் இருக்கும் ஏராளமான பலஸ்தீன கட்டடங்களை இடிப்பதற்கு இஸ்ரேலிய நீதிமன்றம் முன்னுதாரணத்தை வழங்கி இருப்பதாக பலஸ்தீன அதிகாரசபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடங்களை இடிக்கும் திட்டத்தை அகற்றிக்கொள்ளும்படி ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான இணைப்பாளர் ஜெமி மக்கொல்ட்ரிக் மற்றும் ஐ.நா அதிகாரிகள் கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நடவடிக்கையால் 17 பேர் இடம்பெயர வேண்டி ஏற்படுவதோடு மேலும் 350 பேர் பாதிக்கப்படுவதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று அருகில் இருக்கும் மேலும் சுமார் 100 கட்டடங்கள் எதிர்காலத்தில் இதே நிலைமைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

“தொடர்ச்சியான இந்த செயற்பாடு இரு நாடுகள் தீர்வுக்கான எதிர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக உள்ளது” என்று ஐரோப்பிய ஒன்றியம் இது தொடர்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பலஸ்தீன தற்கொலை தாக்குதல்கள் உச்சத்தில் இருந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே 720 கிலோமீற்றர் தடுப்புச் சுவரை கட்டும் திட்டத்தை இஸ்ரேல் ஆரம்பித்தது. இந்த சுவர் மேற்குக் கரை ஊடாக செல்லும் நிலையில் இது நிலத்தை அபகரிக்கும் திட்டம் என்று பலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tue, 07/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை