இலங்கை வரும் நியூசிலாந்து அணியுடன் இணையும் சமரவீர

 நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பு அணியில் முன்னாள் இலங்கை வீரர் திலான் சமரவீர இணைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திலான் சமரவீர, 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48.76 என்ற ஓட்ட சராசரியில் 5,462 ஓட்டங்களை குவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இவர் சர்வதேச அணிகளின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார். பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இவர், ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திலான் சமரவீரவின் அனுபவத்தை தங்களுடைய வீரர்களுக்கும் வழங்கும் பட்சத்தில், நியூசிலாந்து அணி அவரை பயிற்றுவிப்பு அணியில் இணைத்துள்ளது. சமரவீரவின் இணைப்பு குறித்து கருத்து வெளியிட்ட நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெரி ஸ்டீட்,

“திலான் சமரவீர போன்ற வீரரின் திறமையும், அனுபவமும் எமது அணிக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தும். குறிப்பாக இலங்கையின் சூழ்நிலையில் அவரை அணிக்காக பயன்படுத்திக்கொள்ளும் போது, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பீட்டர் புல்டனுக்கு மிகவும் பயனுள்ளவராக இருப்பார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் நாம் மேலதிக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக லுக் ரோன்கியை இணைத்திருந்தோம். எமக்கு குறித்த விடயம் முன்னேற்றத்தையும் தந்திருந்தது. இப்போது திலான் சமரவீரவை இணைத்துள்ளோம். அவரும் எமக்கு சிறந்த பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கிறோம்”

நியூசிலாந்து அணி இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ள நிலையில், திலான் சமரவீர அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை