ஆப்கானிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய தீவு வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட்டின் 42-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இதனையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெய்ல் 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷாய் ஹோப்புடன் இணைந்து விளையாடிய இவின் லீவிஸ் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 39 ஓட்டங்களிலும், நிகோலஸ் பூரன் 58 ஓட்டங்களிலும், ஷாய் ஹோப் 77 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ஓட்டங்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் தவ்லத் ஜட்ரன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குல்புதீன் நைப் 5 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் ரஹமத் ஷா உடன் ஜோடி சேர்ந்த இக்ராம் அலி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் ரஹமத் ஷா 62 ஓட்டங்களிலும், இக்ராம் அலி 86 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவு அணி தரப்பில் பிராத்வெட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி இதுவரை தான் விளையாடிய ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 07/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை