ஐ.தே.க ஏற்படுத்திய அழிவுகளை ஒருபோதும் வெள்ளை ஜூலையாக்க முடியாது

கறுப்பு ஜூலையை உருவாக்கி நாட்டில் அழிவுகளையும், இனங்களுக்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியால் அதனை ஒருபோதும் வெள்ளை ஜூலையாக மாற்ற முடியாது. அனைவரையும் ஒரே இலங்கையர்களாக மாற்றும் “ஒரு நாடு ஒரு சட்டம்” என்றை கொள்கையுடன் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சகலரும் கைகோர்க்குமாறு சுதந்திரக் கட்சி நேற்று அழைப்பு விடுத்தது.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

இந்த ஊடகச்சந்திப்பில் சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சாந்த பண்டார, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ரோஹன லக்ஷ்மன் பியதாஸ,

கறுப்பு ஜூலையை ஏற்படுத்திய ஐ.தே.கவினர் இன்று அதனை வெள்ளை ஜூலையாக மாற்று வோமெனக் கூறுகின்றனர். கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது. இன்று இஸ்லாமிய அடிப்டைவாதமும் தலைத்தூக்கியுள்ளது.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியை கைப்பற்றியதும் 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்தே அந்த அரசியலமைப்புக் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்தே எமது நாட்டில் இன முரண்பாடுகள் ஆரம்பமானது.சிறிமா உட்பட பலரின் பிரஜாவுரிமைகள் பறிக்கப்பட்டன.

1983ஆம் ஆண்டு கலவரத்தில் 471 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் உள்ளன. ஆனால், அதனைவிட இறப்புகள் அதிகமாகும். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். அத்துடன், பல தமிழ் கடைகள் சூறையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகமும் எரிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதி எடுத்திருந்த நடவடிக்கைகளால், சில நாட்களிலே பாதுகாப்புத் துறையின் பங்களிப்புடன் அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஆனால், அன்று ஜே.ஆர். அதனைச் செய்யவில்லை. இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு குண்டர்களை அனுப்பி வன்முறைகளை நாடுமுழுவது தோற்றுவித்தனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் பின்னர்தான் ஜே.வி.பிஆயுதம் தூக்கியது.

1988,1989களில் இதனால் பாரிய அழிவுகளை சந்தித்தோம். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடந்ததென அனைவருக்கும் நினைவிருக்கும். வாக்குப் பெட்டிகளும் அன்று சூறையாடப்பட்டிருந்தன.

அதனால் நாடு யுத்தத்தை நோக்கி நகர்ந்தது என்றார்.

இந்த ஊடகச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

கறுப்பு ஜுலையை மறந்துவிட்டு நாம் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. கொழும்பு உட்பட நாடுமுழுவதுமுள்ள தமிழ்க் கடைகளை அன்று ஐ.தே.க சூறையாடியது. எமது ஊர்களில் இருந்த கடைகளையும் கொள்ளையடித்தனர். தமிழ் சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். இந்த இனவாதச் செயற்பாட்டை எந்தவொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சிங்களம்,தமிழ்,முஸ்லிம் என மூவின மக்களினதும் உரிமைகளை பற்றி சு.கதான் எப்போதும் குரல்கொடுக்கும்.

திருணச் சட்டம், கல்விச் சட்டம், மதச் சட்டமென தனியாக இருக்க முடியாது. அதனால்தான் இன்னமும் இனவாதம், பிரிவினைவாதங்கள்

தளைக்கின்றன.“ஒரு நாடு ஒரு சட்டம்” என்ற சு.கவின் கொள்கையின் கீழ் நாம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு தமிழ்,முஸ்லிம் என அனைவரும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளனர்.

இதுவரை ஏழு சட்டமூலங்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பாராளுமன்றில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை