போதையில் வாகனம் செலுத்துவோரை பிடிக்க விசேட வேலைத்திட்டம்

நாளை முதல் ஆரம்பம்; முதல் 6 மாதத்தில் 128 விபத்துகளில் 1374 பேர் உயிரிழப்பு

மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் விசேட வேலைத் திட்டமொன்று நாளை முதல் ஒரு மாதத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

நாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத் திட்டத்தில், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் பொலிஸாருக்கு சன்மானங்கள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்

பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

2018ம் ஆண்டு முதல் ஆறு மாத காலத்துடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 271 ஆலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 258 ஆலும் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 2018ஆம் ஆண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலும் 1552 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1632 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், இவ்வருடம் முதல் ஆறு மாத காலப் பகுதியில் 1281 வீதி விபத்துக்களில் 1374 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட காலப் பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை 271 ஆலும், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 258ஆலும் குறைவடைந்துள்ளன.

இந்த எண்ணிக்கையை மேலும் குறைக்கும் நோக்கில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு மாத காலத்துக்கு இத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும். மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரைக் கைது செய்த பொலிஸாருக்கு சன்மானம் வழங்கப்படும்.

2018ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 574 பேர் போதையில் வாகனங்களைச் செலுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு முதல் ஆறுமாத காலப் பகுதியில் 36,350 பேர் மது போதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர். பயணிகள் வாகனத்தை போதையில் செலுத்திய சாரதியை கைதுசெய்திருந்தால் அவரைப் பிடித்த பொலிஸாருக்கு 5000 ரூபாவும், ஏனைய வாகனங்களுக்கு 2500 ரூபாவும் வீதம் பெற்றுக் கொடுக்கப்படும். பொலிஸ் சன்மான நிதியத்திலிருந்து இந்தத் தொகை வழங்கப்படும்.

போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ஆகக் கூடியது 25 ஆயிரம் ரூபாவரை தண்டப்பணம் அறவிடப்படும். அது மாத்திரமன்றி போதையில் வாகனம் செலுத்தி கைதுசெய்யப்பட்ட சாரதியை விடுவிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு யாராவது தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தினால் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களையும் முறைப்பாட்டுப் புத்தகத்தில் பதிவுசெய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலையிட்ட நபர்கள் பற்றிய விபரங்களை பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பிவைக்குமாறு போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், அந்தந்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்திருப்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பிலும் நாட்டின் சகல பகுதிகளிலும் வீதி ஒழுங்கு நடைமுறை கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் வீதி ஒழுங்குச் சட்டங்களை மீறியவர்கள் கண்காணிக்கப்பட்டனர். ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 2ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வீதி ஒழுங்கை மீறியவர்களுக்கு எதிராக 5120 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

மகேஸ்வரன் பிரசாத்

 

Thu, 07/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை