இனங்களுக்கிடையில் பிரச்சினையை உருவாக்கி அபிவிருத்தியை பின்தள்ள எதிரணியினர் முயற்சி

அரசியல் வங்குரோத்துடையவர்கள் நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் தந்திரங்களைக் கையாள்கின்றனர். தற்போது நாட்டில் அரங்கேறும் பல சம்பவங்களை நோக்கும் போது இது தெளிவாகி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி நாட்டின் அபிவிருத்தியைப் பின்தள்ளுவதற்கு எதிரணியினர் முயற்சி மேற்கொள்கின்றனர். அரசு இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்காது என நேற்று சனிக்கிழமை பண்டுவஸ்நுவர தொகுதியின் பண்டாரகொஸ்வத்தை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய விஞ்ஞான ஆய்வுகூடத்தினைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.    அதிபர் யூ. எல். அமீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபத்தில் மேலும் உரையாற்றிய பிரதமர், ஏப்ரல் 21 சம்பவத்தின் பின்னர் நாட்டில் துரிதமாக அமைதியை ஏற்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களைச் சட்டத்துக்கு முன் எடுத்துள்ளோம். இதேவேளை, நாட்டை வழமை நிலைக்கு கொண்டுவந்துள்ளோம்.  

எனினும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிலர் இனமுறுகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்கின்றனர். தற்போது நாட்டில் அரங்கேற்றப்படுகின்ற சம்பவங்கள் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளன. இப்பிரதேசமான ஹெட்டிப்பொலையில் தொடங்கிய சம்பவஙகள் நாட்டில் பரவாது தடுத்துள்ளோம்.  

நாட்டில் அமைதியை ஏற்படுத்த சகல முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டுவோர் பற்றி எமக்கு நன்கு தெரியும். இவர்களது முயற்சிகளுக்கு நாம் இடமளியோம் என்று கூறிய பிரதமர் மேலும் உரையாற்றுகையில், கல்வியில் தொழிநுட்பத்துறையை முழுமையாக அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்படுகிறது. அடுத்து வரும் சில வருடங்களில் மாணவர்களைத் தொழில்நுட்ப துறையில் பயிற்றுவிக்கும் திட்டம் பாடசாலைகளில் அறிமுகப்படவுள்ளது.  

உலகின் பல நாடுகளில் கல்வியைத் தொழில்நுட்பத்துறையுடன் இணைக்கும் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத்துறையை எமது நாட்டில் வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

பெருமளவு பாடசாலைகளை முழுமையாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளளது. நாட்டின் சகல பிரதேசங்களிலும கல்விக்கான வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  

குளியாப்பிட்டி தினகரன் நிருபர்  

Sun, 07/21/2019 - 15:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை