மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தல்; தொழிற்சங்கங்கள் எச்சரித்தாலும் பாதிப்பு ஏற்படாது

அமைச்சர் ரவி

மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகத்தை 3 ஆம் திகதி முதல் நிறுத்துவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் எச்சரித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியம் வரை குழாய் இடும் நடவடிக்கையின் போது மோதரை பிரதேசத்தில் அண்மையில் குழப்பம் ஏற்பட்டது.இதற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியுள்ள பெற்றோலிய தொழிற்சங்கங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் 3 ஆம் திகதி முதல் மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

மோதரை பிரதேசத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் இவ் விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.11 வருடங்களாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பலவீனத்தை வடகொழும்பு மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது. எரிபொருள் குழாய் பிரச்சினை தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குமார வெல்கம,அர்ஜுன ரணதுங்க போன்றோர் மனிதாபிமானமாக செயற்பட்டார்கள். அவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பிரதேச மக்களை துரத்த முடியாது. இதனுடன் எந்த நிறுவனம் தொடர்புபட்டிருந்தாலும் எமக்குப் பிரச்சினை கிடையாது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எரிபொருள் விநியோகம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் சவால் விட்டாலும் அது எமக்கு பிரச்சினை கிடையாது.இந்த விடயம் தொடர்பில் பெற்றோலிய அமைச்சர், அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடினோம்.

எரிபொருள் குழாய்கள் இடுவதால் பாதிக்கப்படும் மக்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிதி ஒதுக்க வேண்டும்.15 மாதங்களாக இந்தப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகிறது.

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதும் வழங்காததும் அவர்களது பிரச்சினையாகும்.மின்சார உற்பத்தி தொடர்பில் பிரச்சினை கிடையாது. இந்தப் பிரச்சினை குறித்து அமைச்சரவையிலும் ஆராயப்பட்டது. தொழிற்சங்கங்கள் வீண் குழப்பம் ஏற்படுத்துகின்றன.எரிபொருள் மாபியா காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை