மடு மாதா விழாவுக்கு இரட்டிப்பு பாதுகாப்பு

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவிப்பு

மன்னார் மடு மாத பெருவிழா எதிர்வரும் ஆவணி மாதம் இடம்பெறவுள்ள நிலையில் பெருந்தொகையான பக்தர்கள் வருகை தரும் சாத்தியம் உள்ளதாகவும் எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பேனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

எதிர்வரும் ஆவணி மாதம் 15ஆம் திகதி மடு அன்னையின் பெருவிழா தொடர்பாக மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்ராஸ் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு, போக்குவரத்து, சுகாதாரம், வீதி ஒழுங்குகள், மின்சாரம், குடிநீர், உணவு மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன.

இதன் போது ஆயர் மேலும் கூறுகையில்,

பெருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடுவதற்காக அரசு, அரசு சார்பற்ற திணைக்களங்களைச் சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம். நாடு இன்னும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. இதனால் மக்கள் தொடர்ந்து அச்ச நிலையிலே இருக்கின்றனர்.

எனினும் இவ் விழாவுக்கு வழமையாக பெருந்தொகையான பக்தர்கள் வருதை தருவதுபோல இம்முறையும் இவ்வாறான பக்தர்கள் தொகை வரக்கூடிய சாத்தியம் உள்ளது.

இதனால் இன்றைய சூழ்நிலையில் இங்கு பாதுகாப்பை பலப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதுடன் இங்கு பெருவிழாவுக்கு வந்து செல்லும் பக்தர்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் உள்ளது என்றார்.

இதேவேளை இக் கலந்துரையாடலில் மடு பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்‌ஷ கூறுகையில்,

முன்னரைவிட  இம்முறை மடு பெருவிழாவுக்கு இரட்டிப்பான தொகை பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விட இம் முறை மடு விழாவுக்கான பொலிஸ் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. இத்துடன் விஷேட அதிரடிப் படை பொலிஸாரும் மற்றும் கடற்படை, இராணுவமும் இணைந்த பாதுகாப்புக்குமான ஏற்பாடுகள் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

ஆலய வளாகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதுக்கு அடையாளமாக வாகன கண்ணாடிகளில் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்படும். வாகனங்களை ஆலய வளாகத்துக்குள் தரித்து நிற்பதற்காக ஐந்து இடங்கள் அடையாளமிடப்பட்டுள்ளன.

செபமாலை மாதா வீதிக்குள் உட்செல்வதற்கு பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலகு வாகனங்களுக்கு இவ் வீதியூடாக உட்செல்ல அனுமதிக்கப்படும்.

தண்ணீர் தொட்டியுள்ள பகுதியால் உட்செல்லும் வாகனங்களில் இலகு வாகனங்கள் மாத்திரம் அனுமதி பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே உட்செல்ல அனுமதிக்கப்படும் என்றார்.

தலைமன்னார் நிருபர்

 

Wed, 07/31/2019 - 08:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை