பேச்சில் இணக்கப்பாடின்றேல் வேட்பாளரை சு.க.களமிறக்கும்

'ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன' கட்சி உருவாக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டாவிடின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கட்டாயம் களமிறக்கப்படுவார். எமது கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஸ்ரீல.சு.கவும், ஸ்ரீல.பொதுஜன பெரமுனவும் தனித் தனித் வேட்பாளர்களை களமிறக்கினால், எதிரணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். இருதரப்பும் பொது இணக்கப்பாடொன்றை எட்டும் வகையிலேயே நாம் பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு டார்லி வீதியிலமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை சு.கவும் ஏனையக் கட்சிகளை போன்றே செய்து வருகிறது. கட்சியில் மறுசீரமைப்புகள் முன்னெடுக்கப்படுவதுடன், இளைஞர் அணிகள், மகளிர் அணிகள் மற்றும் தொகுதி கட்டமைப்புகள் என அனைத்தும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பலமான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கிலேயே பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கூட்டணிக்கான பெயராக ஸ்ரீலங்கா நிதாஸ் பொதுஜன பெரமுன என்பதை முன்மொழிந்துள்ளனர். அது ஏற்றுக்கொள்ள கூடியதாகவுள்ளது. அதேபோன்று பல விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளன. பதவிகள் குறித்தே இணக்கப்பாடு இதுவரை ஏற்படவில்லை.

பொதுஜன பெரமுனவுடன் முன்னெடுக்கப் பட்டுவரும் பேச்சுக்கள் தோல்வியடைந்தால் சு.கவின் சார்பில் கட்டாயம் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார்.

அதேபோன்று பொதுஜன பெரமுனவும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கும். இவ்வாறு நடைபெறுமானால் அது எதிரணிக்கே சாதகமாக அமையும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராகுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. நபர்கள் பற்றி எமக்கு பிரச்சினையில்லை.

ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான உரிய இடமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடான கூட்டணிக்கு சாத்தியமில்லை.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர்களாக 5 பேர் போட்டியிடவுள்ளதான விம்பத்தை அரச நிதிகளை செலவழித்து அரசாங்கம் முன்னெடுத்துவருகிறது. சுயாதீன தொலைக்காட்சி முதல் இதற்காக பல அரச நிறுவனங்களில் பாரிய அளவில் நிதிகள் செலவு செய்யப்படுகின்றன. இதுவரை 2 பில்லியன் வரை இதற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை