தகவலறியும் வசதியும் ஊடக சுதந்திரமும் வலுவடைந்துள்ளது

மாத்தளை சுழற்சி, தம்புள்ள தினகரன் நிருபர்கள்

எமது நல்லாட்சி அரசில் தகவலறியும் வசதியும் பூரண ஊடக சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்கி வந்த பாரிய பிரச்சினைகள், கஷ்டங்கள் இன்றில்லை. இந்நிலையில் ஊடகவியலாளர்களின் நன்மை கருதி அவர்களுக்கு உதவுவதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட பத்திரிகை சங்கத்தின் 30 ஆவது வருட நிறைவையொட்டி சிறந்த ஊடகவியலாளர்களுக்கு 'ஊடக அபிமானி 2019'விருது வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாத்தளை மகாத்மா காந்தி சர்வதேச மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேற்படி பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ஹில்பன் பெரின்ஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாத்தளை மாவட்டத்தில் சிறந்த ஊடகவியலாளர்களாக தெரிவு செய்யப்பட்ட 19 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றும்போது:-

சமூக சேவையில் ஈடுபட்டு வரும் ஊடகவியலாளர்கள் மழை, வெயில் பாராமல் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இரத்தினபுரி பகுதியில் செய்தி திரட்டச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கி மரணித்தமை ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கின்ற சவால்களுக்கு எடுத்துக்காட்டாகும். சிறந்த அரசியல்வாதிகளை போல் நாட்டு மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கி சமூக பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களின் பாரிய பங்களிப்பை மறந்துவிட முடியாது.

ஊடகவியலாளர் பொருளாதார ரீதியில் பாரிய வசதி படைத்தவர்கள் அல்ல. இவ்விடயத்தில் நாம் கூடிக் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் அவர்களது தேவைகளுக்கு செவிசாய்த்து ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். ஊடகவியலாளர்கள் நாட்டில் செய்யவேண்டிய பாரிய பணி, அவர்களது பேனாக்களையும் கெமராக்களையும் நல்ல விடயங்களில் பாலும் சமூக பிரச்சினைகளை இனங்கண்டு அதனை தீர்த்து வைக்க கூடிய வகையில் அமைய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் வகையில் மாத்தளையில் இவ்வாறான விழா பாராட்டத்தக்கதாகும் என்றார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான வசந்த அலுவிஹார, ரஞ்சித அலுவிஹார, மாத்தளை மாநகர சபை முதல்வர் டல்ஜித் அலுவிஹார, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை