வர்த்தக சம்மேளன தலைவராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தெரிவுசெய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 180ஆவது வருடாந்த மாநாட்டில் இவர் தலைவராகத் தெரிவானார்.

அக்ஸியாட்டா பெர்ஹாட் குழுமத்தின் பிராந்தியத்துக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியும், பெருநிறுவன நிறைவேற்று பிரதித் தலைவருமான கலாநிதி விஜயசூரிய, வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரபல வங்கியாளர் இராஜேந்திரன் தியாகராஜாவின் இடத்துக்கு தெரிவு

செய்யப்பட்டுள்ளார்.

கலாநிதி விஜயசூரிய கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தொலைத்தொடர்பு தொழில்துறையில் இலங்கை மற்றும் ஆசிய சந்தையில் முன்னணி நிர்வாகியாகக் காணப்படுகிறார். 2016ஆம் ஆண்டு ஆசிய மொபைல் தொழில்துறையின் சிறந்த பங்களிப்பாளர் என்ற விருதையும் இவர் பெற்றிருந்தார்.

டயலொக் அக்‌ஸியாட்டா நிறுவனத்துக்கு கலாநிதி ஹான்ஸ், கடந்த 19 வருடங்களாக பிராந்தியத்துக்கான தலைமைத்துவப் பொறுப்பை ஏற்று செயற்பட்டு வருகின்றார். நான்காவது தொலைபேசி சேவை வழங்குநராகவிருந்த நிறுவனம் இவருடைய காலப் பகுதியிலேயே முன்னணி நிறுவனமாக மாற்றம்பெற்றது.

கொழும்பு கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றார். 1994ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் மொபைல் தொலைத்தொடர்புகளில் கலாநிதிப் பட்டம் பெற்றார். பட்டய பொறியியலாளரான இவர் பிரித்தானியாவின் வோர்விக் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை