ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ​சொஹைப் மலிக்

பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தில் தனது கடைசிப் போட்டியில் விளையாடி முடித்த விரைவில் அந்த அணியின் அனுபவ சகலதுறை வீரர் சொஹைப் மலிக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

எனினும் 37 வயதான மலிக் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டி வரை டி-20 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்துள்ளார். இப்போது எனது இலக்கும் அதுதான் என்று மலிக் குறிப்பிட்டார்.

“20 ஆண்டுகள் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய பல நினைவுகள் உள்ளன. இது ஒரு உணர்வுபுூர்வமான தருணம். சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது எனது வாழ்வில் சிறந்தது. பாகிஸ்தான் டி-20 போட்டிகளில் என்னால் பங்களிப்புச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். நான் உடற்தகுதியுடன் இருக்கிறேன். எனது களத்தடுப்பு ஒரு சொத்தாகும். உலகெங்கும் டி-20 லீக்குகளில் விளையாடி என்னால் பணம் சம்பாதிக்க முடியும், ஆனால் தொடர்ந்து பாகிஸ்தான் டி-20 அணியில் இடம்பெறுவதற்கு நான் தீர்மானித்தேன்” என்று மலிக் குறிப்பிட்டார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் முடித்திருக்கும் மலிக், உலகக் கிண்ணத்திற்கு முன்னரே தனது ஓய்வு பற்றி குறிப்பிட்டிருந்தார். எனினும் அவர் இம்முறை உலகக் கண்ணத்தில் மூன்று போட்டிகளில் விளையாடி 8 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.

“நான் கவலைப்படவில்லை. என்றாலும் நான் எனது துடுப்பாட்ட வரிசையில் அதிகம் நெகிழ்வுப்போக்கை காட்டிவிட்டேன். அணிக்குத் தேவையான எந்த இடத்திலும் நான் துடுப்பெடுத்தாடினேன். சுமார் கடந்த 20 ஆண்டுகளில் நான் பல நேரங்களில் அணியில் இருந்து நிறுத்தப்பட்டேன், சில ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டை இழந்தேன்” என்று மலிக் குறிப்பிட்டார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பித்த மலிக், முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவராகவும் செயற்பட்டுள்ளார். அவர் 237 ஒருநாள் போட்டிகளில் 7534 ஓட்டங்களை பெற்றிருப்பதோடு 111 டி-20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Mon, 07/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக